அங்கித் சவான் விவகாரம் குறித்து ஆக.2-ல் எம்சிஏ நிர்வாகக் குழு முடிவு

அங்கித் சவான் விவகாரம் குறித்து ஆக.2-ல் எம்சிஏ நிர்வாகக் குழு முடிவு
Updated on
1 min read

ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் அங்கித் சவான், மீண்டும் கிரிக்கெட் விளையாட தன்னை அனுமதிக்குமாறு மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் (எம்சிஏ) கோரிக்கை விடுத்துள்ளார். அது தொடர்பாக வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி எம்சிஏ நிர்வாகக் குழு முடிவெடுக்கவுள்ளது.

இது தொடர்பாக மும்பை கிரிக்கெட் சங்க இணைச் செயலாளர் பி.வி.ஷெட்டி கூறுகையில், “தன்னை மீண்டும் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கும்படி மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு அங்கித் சவான் கடிதம் எழுதியுள்ளார். மும்பையில் வரும் 2-ம் தேதி நடைபெறவுள்ள எம்சிஏ நிர்வாகக் குழு கூட்டத்தில் அவருடைய கடிதம் குறித்து விவாதிக்கப்படும். அது தொடர்பாக மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் சரத் பவார் மற்றும் உறுப்பினர்கள் முடிவெடுப்பார்கள்.

சவான் விவகாரத்தில் நாங்கள் என்ன முடிவெடுத்தாலும், அது தொடர்பாக இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் பிசிசிஐக்கே உள்ளது. சவானின் கடிதத்தோடு, எங்களுடைய முடிவையும் நாங்கள் பிசிசிஐக்கு அனுப்பலாம். ஆனால் இறுதியில் பிசிசிஐ என்ன சொல்கிறதோ, அதற்கு நாங்கள் கட்டுப்பட்டாக வேண்டும்” என்றார்.

2013 ஐபிஎல் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங் ஈடுபட்டதாக அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்த சாந்த், அங்கித் சவான், அஜித் சான்டிலா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்றம், ஸ்ரீசாந்த், அங்கித் சவான், அஜித் சான்டிலா ஆகியோருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்றுகூறி விடுவித்தது.

எனினும் இந்த விவகாரத்தில் பிசிசிஐ தனியாக விசாரணை நடத்தி ஸ்ரீசாந்த், அங்கித் சவான் ஆகியோருக்கு வாழ்நாள் தடை விதித்துள்ளது. அந்தத் தடை இன்னும் அமலில் இருக்கிறது. அது விலக்கப்பட்டால் மட்டுமே சவான் மீண்டும் கிரிக்கெட் விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in