

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடருக்கு அஜிங்கிய ரஹானே கேப்டன் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து அவர் கூறும் போது, “ஆச்சரியமளிக்கும் செய்தி” என்று கூறியுள்ளார்.
தனக்கு கேப்டன்சி அளிக்கப்பட்டது குறித்து அஜிங்கிய ரஹானே பிசிசிஐ இணையதளத்தில் கூறும் போது, “என்னிடம் என்ன திறமை உள்ளது என்பது எனக்குத் தெரியும், என் மீது எனக்கு எப்பவும் நம்பிக்கை உள்ளது. நான் இதுவரை என்ன கிரிக்கெட் ஆடியிருக்கிறேனோ அதிலிருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன்.
ஆனால் நான் கேப்டன்சி பற்றி எண்ணிப்பார்க்கவில்லை. எனக்கு கேப்டன்சி கொடுக்கப்படும் என்பது எனக்கு தெரியாது, அது ஆச்சரியகரமான ஒரு செய்தியாகவே எனக்கு வந்து சேர்ந்தது. நான் எப்போதும் உலகின் சிறந்த வீரராக விளங்க வேண்டும் என்ற எண்ணம், செயல் உள்ளவன். எனக்கு எனது திறமைகள் தெரியும்.
தோனியின் மூலம் களத்தில் சூழ்நிலைகளை எப்படிக் கையாள்வது என்பதை கற்றுக் கொண்டேன். விராத் கோலியின் கட்டுப்பாடான ஆக்ரோஷம், இதனை அவரது கேப்டன்சி, பேட்டிங் இரண்டிலும் காணலாம். இவை நான் கற்றுக் கொள்ள விரும்புவனவாகும்.
ராஜஸ்தான் ராயல்ஸில் ராகுல் திராவிடிடம் நிறைய கற்றுக் கொண்டேன், விஷயங்களை எளிதாக வைத்துக் கொள்வது அவரது குணாதிசியம்.
நான் ராகுல் திராவிடிடம் கேப்டன்சி பற்றி குறிப்பாக எதுவும் பேசவில்லை. ஆனால் கேப்டனாக அவர் எப்படித் திட்டமிடுவார் என்பதை என்னிடம் பேசியுள்ளார். தோனி தலைமைத்துவத்தையும், அவரது திட்டமிடுதலையும் பார்த்திருக்கிறேன். கேப்டனாக வித்தியாசமாக யோசிக்க வேண்டும் என்பது இவர்கள் இருவரிடமிருந்து நான் பெற்றது.
ஒரு கேப்டனாக வீரர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்க வேண்டும். மேலும் அணியை சொந்த ஆட்டத்தின் மூலம் முன்னிலையில் வழிநடத்திச் செல்ல வேண்டும்.
இந்த அணி சிறந்த அணி. ஐபிஎல் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் திறமையாக செயல்பட்டவர்களுக்கு அதற்குரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்கள் சிறந்த அணித் தோழர்கள், அவர்களுடன் இணைய ஆர்வமாக இருக்கிறேன்” இவ்வாறு கூறியுள்ளார் ரஹானே.