

ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் 430 ரன்கள் என்ற முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எதிர்த்து ஆடிவரும் ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் கிறிஸ் ரோஜர்ஸ் புதிய டெஸ்ட் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
அதாவது இன்று அரைசதம் எடுத்த கிறிஸ் ரோஜர்ஸ், டெஸ்ட் வரலாற்றில் 7 தொடர் அரைசதங்களை எடுத்த 5-வது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் தொடர்ச்சியாக 7 அரைசதங்களை எடுத்துள்ள மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரர் சர் எவெர்ட்டன் வீக்ஸ், ஜிம்பாப்வேயின் ஆண்டி பிளவர், மே.இ.தீவுகளின் ஷிவ் நரைன் சந்தர்பால், இலங்கையின் குமார் சங்கக்காரா ஆகியோருக்கு அடுத்தபடியாக 5-வது பேட்ஸ்மெனாக இணைந்துள்ளார் கிறிஸ் ரோஜர்ஸ்.
மொயீன் அலி வீசிய பந்தை தேர்ட் மேன் திசையில் தட்டி விட்டு 2 ரன்கள் எடுத்து தன் அரைசதத்தை எடுத்த ரோஜர்சின் சாதனை ரன்னாக அது அமைந்தது. 74 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் ரோஜர்ஸ் அரைசதம் கடந்தார்.
கிறிஸ் ராஜர்ஸ் அடித்த 7 தொடர் அரைசதங்கள் விவரம்:
இந்தியாவுக்கு எதிராக கடந்த தொடரில் பிரிஸ்பன் மைதானத்தில் 2 இன்னிங்ஸ்களிலும் 55. பிறகு மெல்போர்னில் 57, மீண்டும் 69, சிட்னியில் 95 மற்றும் 56.
தற்போது அவர் 83 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். இவருடன் ஸ்மித் 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.
ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்ஸில் சற்று முன்வரை 1 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்தது. டேவிட் வார்னர் 17 ரன்கள் எடுத்து ஜேம்ஸ் ஆண்டர்சனின் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை டிரைவ் ஆட முயன்று எட்ஜ் ஆனதால் குக் கேட்ச் பிடிக்க ஆட்டமிழந்தார்.