

சென்னையில் நடைபெற்று வரும் 89-வது எம்.சி.சி.-முருகப்பா தங்கக் கோப்பைக்கான தேசிய அளவிலான ஹாக்கிப் போட்டியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), ராணுவ லெவன் அணிகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இறுதி ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் ஐஓசி அணியும், பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி அணியும் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் கோலடிக்கவில்லை.
3-வது கால் ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் ஐஓசி வீரர் விகாஷ் சர்மா முதல் கோலை அடித்தார். இதன்பிறகு ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட, 4-வது கால் ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் ஐஓசி 2-வது கோலை அடித்தது. இந்த கோலை அந்த அணியின் கேப்டன் தீபக் தாக்குர் அடித்தார்.
அதேநேரத்தில் தொடர்ந்து போராடிய பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி அணிக்கு 69-வது நிமிடத்தில் கோல் கிடைத்தது. இந்த கோலை கரம்ஜித் சிங் அடித்தார். எனினும் ஐஓசியின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை. இறுதியில் ஐஓசி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
ராணுவ லெவன் வெற்றி
மற்றொரு அரையிறுதியில் ராணுவ லெவன் அணி 3-0 என்ற கோல் கணக்கில் சிஏஜி அணியைத் தோற்கடித்தது. ராணுவ அணி தரப்பில் பிராஜ் எக்கா (13-வது நிமிடம்), சந்தன் அய்ன்ட் (17), பினாய் பெங்ரா (28) ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர்.
இறுதி ஆட்டம்
ஐஓசி - ராணுவ லெவன்
நேரம்: மாலை 6.15
நேரடி ஒளிபரப்பு: தூர்தர்ஷன்