

சிட்டகாங்கில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்ட உணவு இடைவேளையின் போது வங்கதேச தொடக்க வீரர் தமிம் இக்பாலும், தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் குவிண்டன் டி காக்கும் தோள்பட்டை இடிப்பில் ஈடுபட்டனர்.
உணவு இடைவேளைக்கு முன்னதாக கடைசி ஓவரை சைமன் ஹார்மர் வீச, தமிம் அந்தப் பந்தை விளையாடிவிட்டு உணவு இடைவேளைக்காக ஓய்வறைக்குத் திரும்பினார்.
அப்போது தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் குவிண்டன் டி காக் மற்றும் தமிம் இக்பால் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்ற இருவரும் ஒருவரையொருவர் தோள்பட்டையால் இடித்தனர்.
உடனேயே கேப்டன் ஹஷிம் ஆம்லா தலையிட்டு மோதலை தணித்தார்.
இரு அணி வீரர்களும் தனித்தனியாக ஓய்வறை நோக்கி நடக்கும் போது தமிம் இக்பால் மீது தன் கையை தோழமையாகப் போட்டுக் கொண்டு டேல் ஸ்டெய்ன் பேசிக்கொண்டு வந்தார்.
மோதல் சம்பவம் மைதானத்தின் பெரிய திரையை ஆக்ரமித்தது. இதனால் இருவருக்கும் அபராதம் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே தென் ஆப்பிரிக்க வீரர் ரைலி ரூசோவ், 2-வது ஒருநாள் போட்டியின் போது தமிம் இக்பால் விக்கெட்டை கொண்டாட முயன்ற போது அவர் தோள்மீது இடித்தார். நடுவர்கள் இதனை பார்த்துவிட ரூசோவுக்கு அவரது ஆட்டத் தொகையிலிருந்து 50% அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டது.
ஆட்டத்தின் 2-ம் நாளான இன்று தென் ஆப்பிரிக்க அணி சற்று முன் மழையால் ஆட்டம் நிறுத்தப்படும் போது 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்துள்ளது. தமிம் இக்பால் 57 ரன்களையும், மஹ்முதுல்லா 67 ரன்களையும், எடுத்தனர். கேப்டன் முஷ்பிகுர் 16 ரன்களுடனும் ஷாகிப் அல் ஹசன் ரன் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.
தென் ஆப்பிரிக்க தரப்பில் பிலாண்டர், ஹார்மர், வான் ஸில், டீன் எல்கர் ஆகியோர் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர். ஸ்டெய்ன், மோர்கெல் விக்கெட் இல்லை.