

இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது பாகிஸ்தான்.
இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று முன்தினம் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சர்ஃப்ராஸ் அஹமது 77 (74 பந்தகள்), கேப்டன் அசார் அலி 49, அஹமது ஷெஸாத் 44, சோயிப் மாலிக் 42, முகமது ரிஸ்வான் 35 ரன்கள் எடுத்தனர்.
இலங்கை தரப்பில் மலிங்கா 10 ஓவர்களில் 80 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டும், பதிரனா 10 ஓவர்களில் 49 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய இலங்கை அணி, பாகிஸ்தானின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 41.1 ஓவர்களில் 181 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக திரிமானி மட்டும் 56 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் தரப்பில் யாசிர் ஷா 10 ஓவர்களில் 29 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அறிமுக வீரர் இமாத் வாசிம், அன்வர் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சர்ஃப்ராஸ் அஹமது ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது பாகிஸ்தான்.
கல் விழுந்ததால் பதற்றம்
இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்திருந்தபோது மைதானத்தில் கல் எறியப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கேலரியில் இருந்து வந்த கல், பீல்டிங் செய்து கொண்டிருந்த பாகிஸ்தான் வீரர் அருகே விழுந்தது. இதையடுத்து போட்டியை நிறுத்திய மேட்ச் ரெப்ரி ஜவஹல் நாத், இரு அணி வீரர்களையும் அங்கிருந்து வெளி யேறுமாறு கேட்டுக் கொண்டார்.
இதனிடையே கலவர தடுப்பு போலீஸார், ஸ்கோர் பலகை அருகில் இருந்த கேலரியில் அமர்ந்திருந்த ரசிகர்களை வெளியேற்றினர். இந்த சம்பவத்தால் சுமார் 30 நிமிடம் ஆட்டம் பாதிப்புக் குள்ளானது. இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.