

தொழிலதிபர் ஒருவரிடமிருந்து சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, டிவைன் பிராவோ ஆகியோர் லஞ்சம் பெற்றனர் என்ற குற்றச்சாட்டை லலித் மோடி வைக்க, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பரிசீலித்து வருவதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரெய்னாவுடன் தொடர்புடைய ரித்தி ஸ்போர்ட்ஸ் மேலாண்மை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுரேஷ் ரெய்னா கூறியிருப்பதாவது:
"எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. கிரிக்கெட் ஆட்டத்தை நான் மிகவும் நேசிப்பவன், பற்றுதலுடன் அந்த ஆட்டத்தை ஆடி வருகிறேன். எனவே எனக்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை தற்போது பரிசீலித்து வருகிறேன்.
சமீபத்தில் ஊடகங்களில் என்னைப்பற்றி வந்த செய்திகளை முன்வைத்து உலகம் முழுதும் உள்ள எனது ரசிகர்களுக்கு நான் தெரிவிப்பது என்னவென்றால் கிரிக்கெட் ஆட்டத்தில் நான் சரியான உணர்வுடன், உயர்ந்தபட்ச நேர்மையுடன் செயல்பட்டு வருகிறேன். நான் எந்த வித தவறான நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை, என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை.
நான் எந்த அணியை பிரதிநிதித்துவம் செய்தாலும் கிரிக்கெட் ஆட்டத்தைப் பற்றுதலுடனும், அதற்குரிய உணர்வுடன் ஆடி வருகிறேன். எனவே இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க பரிசீலித்து வருகிறேன்” என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
ஏகப்பட்ட சிக்கலில் உள்ள லலித் மோடி தினமும் அரசியல் தலைவர்கள் உட்பட பலரைப் பற்றியும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.
இவர், இந்திய ரியல் எஸ்டேட் தொழிலதிபரும், சூதாட்டத்தில் ஈடுபடுபவருமான ஒரு நபர் 2 இந்திய வீரர்கள், ஒரு மேற்கிந்திய வீரர் ஆகியோருக்கு லஞ்சம் அளித்தது தொடர்பாக ஐசிசிக்கு தான் கடிதம் எழுதியதாக தெரிவித்ததோடு, அந்த 3 வீரர்களின் பெயர்களையும் வெளியிட்டதாக தெரிவித்தார்.
இவரது கடிதம் கிடைத்ததை ஒப்புக் கொண்ட ஐசிசி, அவர் குறிப்பிட்ட 3 வீரர்களுக்கு எதிராக எந்த வித ஆதாரங்களும் இல்லை என்று நற்சான்றிதழ் வழங்கியது. பிசிசிஐ-யும் வீரர்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.