Published : 10 Jul 2015 09:14 PM
Last Updated : 10 Jul 2015 09:14 PM

ஜிம்பாப்வே கேப்டன் சிகும்பராவின் அபார சதம் வீண்: இந்தியாவுக்கு த்ரில் வெற்றி

ஹராரேயில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா போராடி வீழ்த்தி தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது.

256 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஜிம்பாப்வே 251 ரன்கள் வரை வந்து தோல்வி தழுவியது.

ஜிம்பாப்வே கேப்டன் எல்டன் சிகும்பரா 101 பந்துகளில் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 104 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

கடைசி ஓவரில் 10 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலையில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 246/7 என்று இருந்தது ஜிம்பாப்வே, கடைசி ஓவரை புவனேஷ் குமார் வீசினார். யார்க்கர்களை நன்றாக துல்லியத்துடன் வீசினார். இதில் முதல் 3 பந்துகளில் 4 ரன்கள் கிடைத்தது. 4-வது பந்தில் சிகும்பரா லாங் ஆஃபில் அடித்து சிங்கிள் எடுக்க மறுத்தார். 5-வது பந்து தாழ்வான புல்டாஸ், கவர் திசையில் பளார் என்று அடித்தார் ஆனால் கவரில் வேகமாக ரஹானேயிடம் சென்றது ரன் இல்லை. கடைசி பந்தில் ஒரு ரன் வந்தது. ஜிம்பாப்வே மிகவும் வேதனையாக 4 ரன்கள் வித்தியாசத்தில் நெருங்கி வந்து தோற்றுப் போனது.

புவனேஷ் குமார் 10 ஓவர்களில் 35 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார், தவல் குல்கர்னி 9 ஓவர்களில் 60 ரன்கள் கொடுத்து ஏமாற்றம் அளித்தார். ஸ்டூவர்ட் பின்னி 10 ஓவர்களில் 54 ரன்கள் கொடுத்தாலும் தொடக்க வீரர் சிபந்தாவை வீழ்த்தி பிறகு விக்கெட் கீப்பர் முதும்பானியையும் வீழ்த்தினார். ஆனாலும் பவுலிங்கில் இன்னமும் சிக்கனம் காட்ட வேண்டிய தேவை உள்ளது.

ஹர்பஜன் சிங் 10 ஓவர்களில் 46 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். இவரும் அக்சர் படேலும் நடு ஓவர்களில் கட்டுப்பாடுடன் வீசினர். இன்றைய தின சிறந்த பவுலர் என்றால் புவனேஷுக்குப் பிறகு அக்சர் படேல், இவர் 10 ஓவர்களில் 41 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பந்துகள் நன்றாக கிரிப் ஆகி எழும்பி திரும்பின.

தொடக்கத்தில் புவனேஷ், குல்கர்னி ஆகியோர் சிக்கனம் காட்ட 5 ஓவர்களில் 16/1 என்று இருந்தது ஜிம்பாப்வே, சிபாபா, குமாரின் ஒரு எழும்பிய அவுட்ஸ்விங்கருக்கு எட்ஜ் செய்து ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

மசகாட்சா, இவர் அனுபவசாலி. பின்னியை ஒரேஓவரில் 2 பவுண்டரிகள் அடித்தார். 13-வது ஓவரில் பின்னி வீச சிபந்தா, நடந்து வந்து லாங் ஆனில் ஃபிளாட் சிக்ஸ் அடித்தார். ஆனால் முதல் பந்து மேலேறி வந்ததால் பின்னி அடுத்த பந்தை ஷார்ட் பிட்சாக வீச வேண்டும் என்ற கிளிஷேயைக் (தேய்ந்த, வழக்கமான அணுகுமுறை) கடைபிடித்தார். சிபந்தா அந்த ஷார்ட் பிட்சை எங்கு வேண்டுமானாலும் கேட்டு அடித்திருக்கலாம், ஆனால் அவர் சரியாக ஆடாமல் மிட் ஆனில் ஹர்பஜனிடம் கேட்ச் ஆனது. 13 ஓவர்களில் 49/2 என்ற நிலையில் கேப்டன் எல்டன் சிகும்பரா களமிறங்கினார்.

ஹர்பஜன் சிங் மசகாட்சாவுக்கு ஒரு அருமையான ஓவரை வீசி 2 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். 19-வது ஓவரில் அக்சர் படேல் பந்தில் விக்கெட் கீப்பர் உத்தப்பா ஒரு வாய்ப்பை நழுவ விட்டார். 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே 77/2 என்று இருந்தது. ஆனாலும் தேவைப்படும் ரன் விகிதம் அப்போது 5.96 ஆக உயர்ந்தது.

மசகாட்சா 64 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து அக்சர் படேலின் ஒரு பந்து திடீரென நன்றாகத் திரும்பி நன்றாக எழும்ப எதிர்பார்க்காத நிலையில் பாயிண்டில் திவாரியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது சிகும்பரா 23 ரன்களில் இருந்தார்.

25-வது ஓவரில் அக்சர் படேல் மீண்டும் ஒரு முக்கியமான விக்கெட்டை வீழ்த்தினார். சான் வில்லியம்ஸ், இவர் உலகக் கோப்பையில் கலக்கியவர். இவருக்கு ஒரு அருமையான பந்தை பிளைட் செய்து அருமையான லெந்தில் பிட்ச் செய்ய பேட், பேடு இடைவெளியில் புகுந்து பவுல்டு ஆனது, அற்புதமான பந்து அது. 25 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே 94/4 என்று ஆனது.

சிகந்தர் ரசா களமிறங்கி சடுதியில் 3 பவுண்டரிகளை அடித்து உத்வேகம் கொடுத்தார். இதில் மனோஜ் திவாரியை ஒரு பவுண்டரியையும் அக்சர் படேலை ஒரே ஓவரில் 2 பவுண்டரிகளும் விளாசினார். பிறகு ஹர்பஜனையும் ஒரு பவுண்டரி அடித்து துரித கதியில் 26 பந்தில் 27 ரன்களுக்கு வந்தார் சான் வில்லியம்ஸ்.

இந்நிலையில் ஆட்டத்தின் 33-வது ஓவரில் ஹர்பஜன் சிங் வர சிகந்தர் ரசா ஒரு அருமையான கட் ஷாட் பவுண்டரியையும், பிறகு மோசமான ஒரு பந்தை மிட்விக்கெட்டிலும் பவுண்டரி அடித்து 37 ரன்களுக்கு முன்னேறினார். ஆனால் இவரும் ஹர்பஜன் சிங்கின் மோசமான அரைக்குழி பந்தை மோசமாக புல் ஆட அது அக்சரிடம் மிட்விக்கெட்டில் கேட்ச் ஆனது. 33-வது ஓவர் முடிவில் ஜிம்பாப்வே 142/5. வெற்றிக்குத் தேவைப்படும் விகிதம் 6.70

விக்கெட் கீப்பர் முதும்பாமி 7 ரன்னில் பின்னி பந்தில் காலியானார். 39-வது ஓவரில் கிரீமர் ஒரு குவிக் சிங்கிள் எடுக்க ஓடினார், ஆனால் ரஹானே பந்தை எடுத்து நேராக ஸ்ட்ரைக்கர் முனையில் அடித்திருக்க வேண்டும், ஆனால் பந்து படவில்லை. சிகும்பரா ரீச் ஆகும் முயற்சியை ஏறக்குறைய கைவிட்டார். இது அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. 65 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் அவர் அரைசதம் கண்டார்.

40-வது ஓவரில் ஸ்கோர் 173/6. தேவைப்படும் ரன் விகிதம் 8.09 ஆக உயர்ந்தது. அடுத்த 2 ஓவர்களில் 15 ரன்கள் வந்தது. 43-வது ஓவரில் படேல் 2 ரன்களையே கொடுத்தார். 44-வது ஓவரில் குல்கர்னியை ஒரு அபார சிக்ஸரை சிகும்பரா அடிக்க அந்த ஓவரில் 12 ரன்கள் வந்தது.

படேல் மீண்டும் 45-வது ஓவரை சிக்கனமாக வீசி 4 ரன்களே விட்டுக் கொடுத்தார். ஜிம்பாப்வேவுக்கு 30 பந்துகளில் தேவை 50 ரன்கள். இந்நிலையில் 47-வது ஓவரில் குல்கர்னி 13 ரன்களையும் 48-வது ஓவரில் புவனேஷ் குமார் 14 ரன்களையும் விட்டுக் கொடுத்தனர், இதில் முரளி விஜய் ஒரு கேட்ச் வாய்ப்பை சிகும்பராவுக்கு தவற விட்டார்.

மறு முனையில் கிரீமர் 27 ரன்கள் எடுத்து நல்ல சப்போர்ட் கொடுத்து வந்த நிலையில் தேவையில்லாமல் குல்கர்னியின் புல்டாஸை ரிவர்ஸ் ஷாட் ஆடி நேராக பின்னியிடம் பாயிண்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆனால் 49-வது ஓவரிலும் 8 ரன்கள் வந்தது. சிகும்பரா 96 பந்துகளில் தனது சதத்தை எடுத்து முடித்தார்.

கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் புவனேஷ் குமாரின் துல்லியமான யார்க்கர்களும், ஓரளவுக்கு ரஹானேயின் களவியூகமும் இந்தியாவை தோல்வியிலிருந்து காப்பாற்றியது. ஜிம்பாப்வே உண்மையில் இந்திய அணியை ஒரு நல்ல விரட்டல் மூலம் அச்சுறுத்தியது என்றே கூற வேண்டும்.

விஜய், கேதர் ஜாதவ், திவாரி, உத்தப்பா ஆகியோர் பங்களிப்பு செய்ய வேண்டும், இவர்கள் பங்களிப்பு செய்திருந்தால் நிச்சயம் ஸ்கோர் 300 ரன்களுக்குச் சென்றிருக்கும். ஆனால் 90 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் ராயுடுவின் சதமும், பின்னியின் 77 ரன்களும் பிற்பாடு அக்சர் படேல், புவனேஷ் குமார் பந்து வீச்சிலும் இந்தியா வெற்றியை போராடி பெற்றது.

ஆட்ட நாயகனாக அம்பாத்தி ராயுடு தேர்வு செய்யப்பட்டார். ஆனால் சிகும்பராவும் இவரும் பகிர்ந்து கொண்டிருப்பதுதான் நியாயமாக இருக்கும். ஏனெனில் சிகும்பரா ஆடியது 'வாட் அன் இன்னிங்ஸ்' வகையறாவைச் சேர்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x