

*
விம்பிள்டன் மகளிர் இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் வென்றதன் மூலம், மகளிர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை சானியா மிர்சா படைத்துள்ளார்.
லண்டனில் நடைபெற்ற விம்பிள் டன் மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்தியாவின் சானியா மிர்சா ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங் கிஸ் ஜோடி, ரஷ்யாவின் எகடேரினா மகரோவா- எலினா வெஸ்னினா ஜோடியை எதிர்கொண்டது.
ஆரம்பம் முதலே போட்டியில் விறுவிறுப்பு இருந்தது. முதல் செட்டை ரஷ்ய ஜோடி 5-7 என்ற கணக்கில் கைப்பற்றியது. டைபிரேக்கர் வரை சென்ற இரண்டாவது செட்டை 7-6(4) என்ற கணக்கில் சானியா ஜோடி கைப்பற்றியது. வெற்றியை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் அனல் பறந்தது. ஒருகட்டத்தில் 2-5 என்ற கணக்கில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி பின்தங்கியிருந்தது.
ஆனால், போராட்ட குணத்தை வெளிப்படுத்திய சானியா-ஹிங் கிஸ் ஜோடி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி 7-5 என்ற கணக்கில் 3-வது செட்டைக் கைப்பற்றி, விம்பிள்டன் பட்டத்தை வென்றது. இதன்மூலம் முதன்முதலாக விம்பிள்டன் மகளிர் இரட்டையர் பிரிவு பட்டத்தைப் பெற்றுள்ளார் சானியா.
நான்காவது கிராண்ட்ஸ்லாம்
சானியா மிர்சாவுக்கு இது நான்காவது கிராண்ட்ஸ்லாம் ஆகும். அவர் ஏற்கெனவே கலப்பு இரட்டையர் பிரிவில் 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். ஆனால், மகளிர் இரட்டையர் பிரிவிலும், விம்பிள் டனிலும் சானியா பட்டம் வெல்வது இதுவே முதல் முறை.
மகேஷ் பூபதியுடன் இணைந்து 1999-ல் ஆஸ்திரேலிய ஓபன், 2012-ல் பிரெஞ்ச் ஓபன், புரூனோவுடன் இணைந்து 2014-ல் அமெரிக்க ஓபன் பட்டங்களை சானியா கலப்பு இரட்டையர் பிரிவில் வென்றுள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபனில், எலினா வெஸ்னினாவுடன் இணைந்து இறுதிச் சுற்றுவரை முன்னேறிய சானியா பட்டத்தை தவறவிட்டார்.
மகத்தான சாதனை படைத்துள்ள சானியா மிர்சாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி உட்பட பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.