

வங்கதேசத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பலம் குறித்து வங்கதேச கிரிக்கெட் பயிற்சியாளர் ஹதுரசிங்கே அச்சம் கலந்த குரலில் பேசியுள்ளார்.
வங்கதேச அணியின் மிகப்பெரிய பலமே அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள்தான், தன் நாட்டு பேட்ஸ்மென்கள் ஒரு ரன் எடுத்தால் காட்டுக்கூச்சல் போடுவதும், எதிரணி வீரர் புரட்டி எடுத்தால் கூட வாயைத் திறக்காமல் மைதானமே மவுனத்திலும் நிச்சலனத்திலும் மூழ்கிவிடுவதை அனைவரும் பார்த்திருக்கலாம்.
இந்நிலையில், அந்த உற்சாகமான ரசிகர்களின் வாயை தென் ஆப்பிரிக்க அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் அடைத்துவிடுவார் என்று அந்த அணியின் பயிற்சியாளர் ஹதுர சிங்கே அச்சம் கலந்த குரலில் பேசியுள்ளார்.
இது பற்றி அவர் கூறும்போது, “டிவில்லியர்ஸ் பற்றி நான் ஒரேயொரு விஷயத்தை மட்டுமே கூற விரும்புகிறேன். பந்துவீசி விட்டு அவர் அவுட் ஆக வேண்டிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
உலகின் தலை சிறந்த நடப்பு பேட்ஸ்மென் டிவில்லியர்ஸ்; ஒரு முழுமையான பேட்ஸ்மென் அவர். அவருக்கு எதிராக எந்த வித திட்டமிடுதலும் பயனளிக்காது. நல்ல லெந்த்தில் வீசி அவரை கட்டுப்படுத்தலாம், இயன்றவரை அவரைக் கட்டுப்படுத்த மட்டுமே முயற்சி செய்ய முடியும்.
இது பயனளித்தாலும் அளிக்கும், யாருக்குத் தெரியும்? அவரும் ஒரு மனிதர்தானே!” என்று கூறியுள்ளார்.