Last Updated : 21 Jul, 2015 09:45 AM

 

Published : 21 Jul 2015 09:45 AM
Last Updated : 21 Jul 2015 09:45 AM

இந்திய ஹாக்கி பயிற்சியாளர் நீக்கம்?

நான் தலைமைப் பயிற்சி யாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டேன் என இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பால் வான் அஸ் தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்தைச் சேர்ந்த வான் அஸ், பயிற்சியாளராக பொறுப்பேற்று 5 மாதங்களே ஆன நிலையில் திடீரென நீக்கப் பட்டிருப்பதாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

இந்திய வீரர்களுக்கான பயிற்சி முகாம் இமாசலப் பிரதேச மாநிலம், ஷிலரூவில் உள்ள சாய் மையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. ஆனால் அதில் வான் அஸ் பங்கேற்கவில்லை. இதனால் பல கேள்விகள் எழுந்த நிலையில் இப்போது நீக்கப்பட்டிருப்பதாக வான் அஸ் குறிப்பிட்டுள்ளார்.

உலக ஹாக்கி லீக் போட்டி யில் இந்தியாவும், மலேசியா வும் மோதிய காலிறுதி ஆட்டத் தின்போது, ஹாக்கி இந்தியா தலைவர் நரீந்தர் பத்ரா வீரர்களை அழைத்து பேசியுள்ளார். அப்போது குறுக்கிட்ட வான் அஸ், அங்கிருந்து வெளியேறுமாறு பத்ராவிடம் கூறியுள்ளார். இதனால் அவர் களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் வான் அஸ் நீக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக வான் அஸ் கூறியிருப்பதாவது:

எனக்கு தெரிந்து உலக ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டி முடிந்த ஒரு வாரத்திலேயே பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டேன். எனக்கு பதிலாக பயிற்சியாளர் பதவியை கவனிக்குமாறு அணியின் உயர் செயல்பாடு இயக்குனர் ரோலன்ட் ஓல்ட்மான்ஸ் கேட்டுக்கொள்ளப்பட்டார்.

நானாக பயிற்சியாளர் பதவி யில் இருந்து விலகவில்லை. விலகுமாறு கேட்டுக்கொள்ளப் பட்டேன். நான் பயிற்சியாளராக நீடிப்பதை நரீந்தர் பத்ரா விரும்பவில்லை என ஓல்ட்மான்ஸ் என்னிடம் தெரிவித்தார்.

நான் நீக்கப்பட்டது தொடர்பாக எனக்கு அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. இந்த வாரத்துக்குள் அந்த தகவல் வரும் என எதிர்பார்க்கிறேன். நான் பயிற்சி முகாமுக்கு செல்லாததற்கு இதுதான் உண்மையான காரணம் என்றார்.

திடீரென நீக்கப்பட்டதற்கு ஏதாவது காரணம் உள்ளதா என வான் அஸ்ஸிடம் கேட்டபோது, “அப்படி ஏதும் இல்லை” என்றார்.

உலக ஹாக்கி லீக் போட்டியின்போது ஹாக்கி இந்தியா தலைவர் நரீந்தர் பத்ராவுடன் மோதல் ஏற்பட்டதை உறுதி செய்த வான் அஸ், “மைதானத்துக்குள் நுழைந்த பத்ரா, வீரர்களிடம் இந்தியில் பேசிக் கொண்டிருந்தார். அவர் வீரர்களுக்கு ஏதோ ஆலோசனை கூறுகிறார் என்று நினைத்தேன். ஆனால் அவர் வீரர்களை விமர் சிப்பது தெரிந்ததும், நான் குறுக்கிட்டேன்.

ஏனெனில் மைதானத்தில் விளையாடும்போது அது என்னுடைய வரையறைக்குட் பட்ட பகுதி. அங்கு வீரர்களை காக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. அதனால் அவரை அங்கிருந்து வெளியேறுமாறு கூறினேன். அந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் நன்றாகத்தான் விளையாடினார்கள். அதில் வெற்றியும் கண்டார்கள்” என்றார்.

இந்திய அணியின் பயிற்சி யாளராக தொடர விரும்புகிறீர்களா என கேட்டபோது, “அதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நானாக ஒருபோதும் விலகவில்லை” என்றார்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட வெளிநாட்டைச் சேர்ந்த 6-வது பயிற்சியாளர் வான் அஸ் ஆவார்.

நரீந்தர் பத்ரா மறுப்பு

பயிற்சியாளர் பதவியிலிருந்து வான் அஸ் நீக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலை ஹாக்கி இந்தியா தலைவர் நரீந்தர் பத்ரா மறுத்துள்ளார். வான் அஸ்ஸின் திட்டம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என குறிப்பிட்டுள்ள அவர், “ஜூலை 17-ம் தேதி வான் அஸ் இந்தியா வருவதாக இருந்தது. ஆனால் இன்னும் வரவில்லை. அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை” என்றார்.

இதேபோல் உலக ஹாக்கி லீக் போட்டியின்போது வான் அஸ்ஸுடன் மோதல் ஏற்பட்டதாக வெளியான தகவலையும் பத்ரா மறுத்துள்ளார். இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பதற்காக ஹாக்கி இந்தியாவின் உயர் மட்டக் குழு வரும் 24-ம் தேதி கூடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x