

பாகிஸ்தான் அணி வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடவிருந்தது. இந்நிலையில், அந்த சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு வெளிப்படையான காரணம் அறிவிக்கப்படவில்லை.
இருப்பினும், 2017-ம் ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால்தான் இம்முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
‘பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் நடைபெற்ற இதுதொடர்பான ஆலோசனைக்கூட்டத்தில், இம்முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது. இரு வாரியங்களுமே, வேறு மாதத்தில் போட்டித்தொடர்களை நடத்துவதற்கான வாய்ப்புகளை எதிர்பார்த்துள்ளன’ என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு, பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடந்தன. ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானில் கடந்த மே மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டதால் இது சாத்தியமாயிற்றது. இதற்குப் பிரதியுபகாரமாக ஜிம்பாப்வே செல்ல பாகிஸ்தான் ஒப்புக் கொண்டது.
இந்நிலையில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் வென்றதன் மூலம், ஐசிசி தரவரிசையில் பாகிஸ்தான் 9-வது இடத்திலிருந்து 8-வது இடத்துக்கு முன்னேறியது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெறுவதற்கு இதுபோதுமானது. வரும் செப்டம்பர் 30-ம்தேதி வரையிலான தரவரிசை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஜிம்பாப்வேயுடன் விளையாடி, பாகிஸ்தான் தொடரை இழந்தால் அது, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பைச் சிதைத்துவிடும்.
மேற்கிந்தியத்தீவுகள், பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கும் முத்தரப்புத் தொடரை நடத்தவும் ஜிம்பாப்வே திட்டமிட்டது. ஆனால், பாகிஸ்தான் தனது சுற்றுப்பயண திட்டத்திலிருந்து பின்வாங்கிவிட்டது. ஜிம்பாப்வே தரப்பிலிருந்து இதுதொடர்பான அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை.