

அமெரிக்காவின் வின்னெட்கா நகரில் நடைபெற்ற ஏடிபி சேலஞ்சர் போட்டியில் இந்தியாவின் சோம்தேவ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இது சோம்தேவ் வென்ற 5-வது ஏடிபி சேலஞ்சர் பட்டமாகும்.
சோம்தேவ் தனது இறுதிப் போட்டியில் 7-5, 4-6, 7-6 (5) என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் டேனியல் நுயனை தோற்கடித்தார். மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டம் 3 மணி நேரம், 31 நிமிடங்கள் நடைபெற்றது. இதன்மூலம் இறுதிப்போட்டியில் அதிகநேரம் விளையாடிய இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
வெற்றி குறித்துப் பேசிய சோம்தேவ், “இது மிகப்பெரிய வெற்றியாகும். இந்த ஆண்டில் தொடர்ந்து கடுமையாக உழைத்த போதிலும், வெற்றி பெற முடியா மல் கடுமையாகப் போராடினேன். இப்போது வெற்றி பெற்றிருப்பதன் மூலம் நெருக்கடியிலிருந்து மீண்டுள்ளேன்.
டேனியல் என்னை கடுமையாகப் போராட வைத்தார். அவர் நல்ல வீரர் மட்டுமல்ல, நல்ல போட்டியாளரும்கூட” என்றார்.