Published : 02 Jul 2015 09:46 AM
Last Updated : 02 Jul 2015 09:46 AM

பிஃபா மகளிர் உலகக்கோப்பை கால்பந்து: இறுதிப்போட்டியில் நுழைந்தது அமெரிக்கா- ஜெர்மனியை 2-0 கோல் கணக்கில் வென்றது

மகளிர் உலகக் கோப்பை கால் பந்துப் போட்டி அரையிறுதியில் ஜெர்மனியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய அமெரிக்கா, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

கனடாவின் மான்ட்ரியல் நகரில் மகளிர் உலகக் கோப்பை கால்பந்து முதல் அரையிறுதிப் போட்டி நடந்தது. இதில், உலகத் தரவரிசை யில் 2-வது இடத்தில் உள்ள அமெரிக்கா, முதலிடத்தில் உள்ள ஜெர்மனியை எதிர் கொண்டது.

உலகின் தலைசிறந்த முதல் இரு அணிகள் மோதியதால் ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது. முதல் பாதியில் இரு அணிகளும் தீவிரமாக முயன்றும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் இரண்டாவது பாதியில் கோலடிக்க இரு அணி வீராங்கனைகளும் போராடினர். ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் ஜெர்மனி அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இத்தொடரில் இதுவரை 6 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்தவர் வரிசையில் முதலிடத்தில் உள்ள ஜெர்மனியின் செலியா சசிக் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவர் அடித்த பந்து கோல் வளைக்கு வெளியே சென்றது.

66-வது நிமித்தில் அமெரிக்கா வின் அலெக்ஸ் மோர்கனுக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், தாழ்வாக அவர் அடித்த பந்து கோல் வளைக்குள் புகவில்லை. மோர்கன் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியும் அவரால் கோலடிக்க முடியவில்லை.

அமெரிக்காவுக்கு 69-வது நிமிடத் தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அமெரிக்காவின் கேப்டன் கார்லி லாய்டு அந்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்திக் கொண்டு கோலடித் தார். இதனால், அமெரிக்கா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. அதன் பின்னர் கெல்லி ஓ ஹரா அமெரிக்காவுக்கான 2-வது கோலை 84-வது நிமிடத்தில் அடித்தார். ஆட்ட நேர முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்த அமெரிக்கா, ஜெர்மனியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

ஆட்டநாயகியாக கார்லி லாய்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கூறும்போது, “நாங்கள் போட்டியில் வெற்றிபெறவே வந்தோம். உலகக் கோப்பையில் வெறும் பங்கேற்பாளராக இருக்க விரும்பவில்லை. நாங்கள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நுழைந்துள்ளோம். எங்களுக்கு எதிராக ஒரே அணிதான் விளையாட வுள்ளது. அது எந்த அணி என்பது பற்றிக் கவலையில்லை. அது யாராக இருந்தாலும் ஆக்ரோஷ மாக விளையாடுவோம்” என தெரிவித்தார்.

ஜெர்மனிக்கு எதிராக பெனால்டி அளிக்கப்பட்டதற்கு அந்த அணியின் பயிற்சியாளர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இறுதிப்போட்டி

கடந்த 1991, 99-ம் ஆண்டுகளில் அமெரிக்கா உலகக் கோப்பையை வென்றுள்ளது. எனவே, 3-வது முறையாக கோப்பையைக் கைப் பற்றும் தீவிரத்துடன் உள்ளது.

2-வது அரையிறுதியில் ஜப்பானும், இங்கிலாந்தும் மோது கின்றன. இப்போட்டியில் வெல்லும் அணி வரும் 5-ம் தேதி வான்கூவரில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டி யில் அமெரிக்காவுடன் மோதும்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x