4 ரன்களில் சதத்தை தவறவிட்ட கே.எல்.ராகுல்: இந்தியா ஏ அணி 221/6

4 ரன்களில் சதத்தை தவறவிட்ட கே.எல்.ராகுல்: இந்தியா ஏ அணி 221/6
Updated on
1 min read

சென்னை, சேப்பாக்கத்தில் இன்று தொடங்கிய ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 4 நாள் போட்டியில் இந்தியா ஏ அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்துள்ளது.

ராகுல் திராவிட் பயிற்சியின் கீழ் முதல் போட்டியான இதில் டாஸ் வென்ற கேப்டன் புஜாரா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

மிகவும் மந்தமான பிட்சில் பேட்டிங் அவ்வளவு சுலபமாக இல்லை. ஆஸ்திரேலிய பவுலர்களும் 187/3 என்று இருந்த இந்திய ஏ அணியை 221/6 என்று சற்றே பின்னடைவு காணச் செய்தனர்.

ஆட்ட முடிவில் வி.ஷங்கர் 4 ரன்களுடனும் அமித் மிஸ்ரா ரன் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

ராகுல் (185 பந்துகளில் 96 ரன்கள்), புஜாரா (122 பந்துகளில் 55) ஆகியோர் சிறப்பாக விளையாடினர். இளம் வீரரான ஷ்ரேயஸ் ஐயர் 58 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார்.

உஸ்மான் கவாஜா தலைமையிலான ஆஸ்திரேலியா ஏ அணியில் பெகீட், மற்றும் ஓ’கீஃப் தலா 2 விக்கெட்டுகளையும், இந்திய வம்சாவளி வேகப்பந்து வீச்சாளர் ஜி.எஸ்.சாந்து 1 விக்கெட்டையும், சான் அபாட் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

வங்கதேச தொடரை டெங்குவினால் இழந்த ராகுல், எச்சரிக்கையுடன் ஆடினார், புஜாராவுடன் 107 ரன்கள் பார்ட்னர்ஷிப்புக்கு பங்களிப்பு செய்தார். 14 பவுண்டரிகளுடன் 96 ரன்கள் எடுத்த ராகுல், சான் அபாட் பந்தில் மிட் ஆனில் உஸ்மான் கவாஜாவிடம் எளிதான கேட்ச் கொடுத்து சதத்தை நழுவ விட்டார்.

அபிநவ் முகுந்த் 9 ரன்களில் வெளியேறிய பிறகு, புஜாரா, ராகுல் நிலைநிறுத்தும் பணியைச் செவ்வனே செய்தனர்.

ஆனால் புஜாரா, கருண் நாயர் (0) அடுத்தடுத்து வெளியேற ராகுலும், ஷ்ரேயஸ் ஐயரும் மீண்டும் நிலை நிறுத்த வேண்டியதாயிற்று, தேநீர் இடைவேளையின் போது இந்தியா ஏ 175/3 என்று இருந்தது.

பெரிய ஸ்கோருக்கு உகந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய ஐயர், தேநீர் இடைவேளைக்குப் பிறகு பவுல்டு ஆனார். நடுவர் நிதின் மேனன் இதனை நோ-பால் என்று கருதி 3-வது நடுவரை அழைத்த பிறகே நோ-பால் இல்லை என்று உறுதி செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in