பயிற்சியைப் புறக்கணித்த உமர் அக்மல்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி

பயிற்சியைப் புறக்கணித்த உமர் அக்மல்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி
Updated on
1 min read

இலங்கைக்கு எதிராக வரவிருக்கும் ஒருநாள் தொடருக்கு பாகிஸ்தான் பேட்ஸ்மென் உமர் அக்மல் தேர்வுக்கு பரிசீலிக்கப்படவில்லை. காரணம், அவர் பயிற்சிக்கு அழைப்பு விடுத்திருந்தும் புறக்கணித்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தேர்வாளர் ஹரூன் ரஷீத் பிடிஐ-யிடம் தெரிவிக்கும் போது, “இலங்கைக்கு எதிரான ஒருநாள் அணிக்கு தேர்வு செய்யப்படவிருந்த வீரர்களுக்கு தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஆஜராகுமாறு கூறியிருந்தோம். ஆனால் உமர் அக்மல் வரவில்லை.

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமை பயிற்சியாளர் முகமது அக்ரமிடம் உமர் அக்மல் பேசி, மறுநாள் வருவதாக தெரிவித்திருந்தார், ஆனால் மறுநாளும் வரவில்லை. சில வீரர்கள் தங்கள் கிரிக்கெட் கரியரை இவ்வாறு பாழடித்துக் கொள்கிறார்கள் எனும்போது நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்றார்.

ஆனால் உமர் அக்மலுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கையில், கரீபியன் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக அவர் செல்லாமல் இருந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.

கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக உமர் அக்மல் விளையாடவுள்ளார்.

இது குறித்து தேர்வாளர் ரஷீத் கூறும்போது, “சில வீரர்கள் பாகிஸ்தானுக்காக ஆடும்போது தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வது நலம், இல்லையெனில் அவர்கள் மோசமான எதிரிகளாகவே பார்க்கப்படுவர்.

எங்கள் திறமைகளை நாங்கள் விரயம் செய்யவில்லை, ஆனால் உமர் அக்மல் தனது கிரிக்கெட் பாதையை தீர்மானித்துக் கொள்வது நலம். ஆனாலும் அவர் எப்போது அணித் தேர்வுக்குத் தான் தயார் என்று கூறுகிறாரோ அப்போது அவர் தேர்வுக்கு பரிசீலனை செய்யப்படுவார்.

ஆனால், அதற்கு முன் கிரிக்கெட் வாரியம் அறிக்கை கேட்டால் இந்த துரதிர்ஷ்டமான நிகழ்வை நாங்கள் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கும்” என்றார்.

இந்நிலையில் உமர் அக்மல், மற்றும் அகமது ஷெசாத் குறித்து பாகிஸ்தான் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ், கேப்டன் மிஸ்பா ஆகியோர் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தெரிகிறது. முதலில் இருவரையும் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆட வையுங்கள், அவர்களது அணுகுமுறை, கட்டுக்கோப்பு, ஒழுங்கு ஆகியவை நேராகும் வரை தேசிய அணிக்கு தேர்வு செய்ய வேண்டாம் என்று வக்கார், மிஸ்பா கூறியுள்ளதாக தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in