Published : 28 Jul 2015 03:13 PM
Last Updated : 28 Jul 2015 03:13 PM

டெஸ்ட் அணியில் எனது இடம் சற்றே சிக்கலில்தான் உள்ளது: ரோஹித் சர்மா

மே.இ.தீவுகளுக்கு எதிரான தனது அறிமுக தொடரில் 2 சதங்களை அடித்த ரோஹித் சர்மா அதன் பிறகு 17 டெஸ்ட் இன்னின்ங்ஸ்களில் இரண்டு முறை மட்டுமே அரைசதம் கடந்துள்ளார்.

2012-ம் ஆண்டு இலங்கைக்கு இந்திய அணி சென்ற போது ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் ஸ்கோர் 5,0,0,4,4 ஆகும்.

மேலும் இந்திய அணி 5 பவுலர்களைக் கொண்டு ஆட முடிவெடுத்தால் ரோஹித் சர்மாவின் இடம் கேள்விக்குறியாகிவிடுகிறது. ஆனாலும் விராட் கோலி கேப்டனான பிறகு 3 டெஸ்ட் போட்டிகளில் புஜாராவுக்குப் பதிலாக 3-ம் நிலையில் ரோஹித்தை களமிறக்கி அழகு பார்த்தார் விராட் கோலி. இதில் ரோஹித்தின் ஸ்கோர் 53, 39, மற்றும் 6.

இந்நிலையில் டெஸ்ட் இடத்தைத் தக்க வைக்க ரோஹித் சர்மா இலங்கைக்கு எதிராக வரவிருக்கும் தொடரில் தன்னை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

தனது டெஸ்ட் இடம் பற்றி பிசிசிஐ.டிவிக்கு பேசிய ரோஹித் சர்மா, “டெஸ்ட் இடம் என்பது விலைமதிப்பற்றது. அந்த இடம்தான் எனக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது. எனவே அந்த இடத்தை அவ்வளவு எளிதில் விட்டுவிட மாட்டேன். நான் மட்டுமல்ல, எந்த ஒரு வீரரும் டெஸ்ட் இடத்தை இழக்க அனுமதிக்க மாட்டார்கள்.

ஆனால் என்னைப் பொறுத்தவரை எளிதாக இருக்கவில்லை. நான் டெஸ்ட் போட்டிக்கு அறிமுகமாவதற்கு 5-6 ஆண்டுகள் காத்திருந்தேன். ரஞ்சி போட்டிகளில் ரன்களை வாரிக் குவித்தேன். அப்போதெல்லாம் இந்திய டெஸ்ட் அணியில் பலமான நடுக்கள வீரர்கள் இருந்தனர். ஆகவே அப்போது நான் அறிந்தேன் டெஸ்ட் இடம் சுலபமல்ல, காத்திருக்கத்தான் வேண்டும் என்பதை.

இப்போதோ நான் ஒரு சிக்கலான நிலையில் விளையாடி வருகிறேன். ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக ஆடவேண்டும் என்பதே எனது விருப்பம், ஆனால், இப்போதெல்லாம் டெஸ்ட் போட்டிகள் விளையாடப்படும் விதமும் எளிதானதல்ல என்பதை எனக்கு அறிவுறுத்துகிறது. டெஸ்ட் கிரிக்கெட் எளிதல்ல. அத் ஒரு பெரிய சவால், நான் சவால்களை விரும்புபவன்.

2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்டில் அறிமுகமாகிறேன் என்பது உற்சாகம் அளித்தது, ஆனால் காயத்தினால் ஆடமுடியாமல் போக 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று.

டெஸ்ட் கிரிக்கெட் நான் மிகவும் விரும்பும் ஒரு போட்டி. ஆனால் சில விஷயங்கள் நம் கையில் இல்லை. 4 ஆண்டுகள் காத்திருந்தது சரியென்றே படுகிறது. அறிமுகப் போட்டியில் சதம், ஆனால் அதன் பிறகு ஒன்றும் பெரிதாக சாதித்து விடவில்லை. நான் இன்னமும் கற்றுக் கொண்டிருக்கிறேன் இந்தியாவுக்கு வெளியே டெஸ்ட் போட்டிகளை ஆடுவது நலல் அனுபவத்தை வழங்கும்.

இந்திய அணியை மீண்டும் டெஸ்ட் நம்பர் 1 அணியாகக் கொண்டு வர பங்களிப்பு செய்ய ஆவலாக இருக்கிறேன். அது அவ்வளவு எளிதானதல்ல. ஆனால் நம்மிடம் அதற்கான வீரர்கள் உள்ளனர். நாம் ஏன் நம்பர் 1 நிலையை எட்டமுடியாது என்பதற்கு எந்த வித காரணமும் எனக்கு தெரியவில்லை.

அணியில் போட்டி என்று வருவது பற்றி பேசினால், நாம் எது செய்தாலும் அதில் ஒரு சவால் இருக்கவே விரும்புவோம். அணியில் நல்ல இடத்தைப் பிடித்து தக்கவைத்தாலும் உலகின் சிறந்த அணிகளுக்கு எதிரான சவால்களை சீராக சந்திக்க வேண்டி வரும். எனவே போட்டியை நான் அழுத்தமாக எடுத்துக் கொள்ளவில்லை. நான் எப்பவும் அதனை விரும்புகிறேன்.

கடைசியில் எது நிற்கப் போகிறது? களத்தில் நாம் ஆடும் ஆட்டம் மட்டும்தான். வாய்ப்பு கிடைக்கும் போது அதனை பற்றிக் கொள்வது அவசியம்” என்றார் ரோஹித் சர்மா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x