ஐபிஎல் சிஇஓவுக்கு முடிவெடுக்கும் அதிகாரமில்லை: அனுராக் தாக்குர் அதிரடி

ஐபிஎல் சிஇஓவுக்கு முடிவெடுக்கும் அதிகாரமில்லை: அனுராக் தாக்குர் அதிரடி
Updated on
1 min read

ஐபிஎல் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சுந்தர் ராமன் ஒரு ஊழியர்தான்; அவருக்கு ஐபிஎல் அமைப்பில் முடிவெடுக்கும் அதிகாரம் கிடையாது என பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் ஐபிஎல் சிஇஓ சுந்தர் ராமன் ஏன் இன்னும் சஸ்பெண்ட் செய்யப்பட வில்லை என அனுராக் தாக்குரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: அவருக்கு எதிராக அவசரகதியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை. அவருக்கு எதிரான வழக்கில் இன்னும் தீர்ப்பு வரவில்லை. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

நாங்கள் பொறுப்பேற்றபோது சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ் தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிராக விசாரணை நடைபெற்று வந்தது. அந்த அணிகள் விஷயத்தில் லோதா கமிட்டியின் தீர்ப்புக்காக காத்திருந்தோம். அந்த தீர்ப்பு இப்போது வந்து விட்டதால், அதை முற்றிலுமாக அமல்படுத்துவதற்கு முடிவு செய்துள்ளோம். ஏன் சுந்தர் ராமன் மீது அவசரகதியில் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவ்வளவு அவசரப்படுகிறீர்கள்” என கேள்வியெழுப்பினார் தாக்குர்.

பிசிசிஐ தலைவராக சீனிவாசன் இருந்தபோது செல்வாக்குமிக்கவ ராகத் திகழ்ந்தவர் சுந்தர் ராமன். ஆனால் தாக்குரோ, “சுந்தர் ராமன் ஒரு ஊழியர்தான். ஐபிஎல் அமைப்பில் முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை. ஐபிஎல் அமைப்பைப் பொறுத்த வரையில் ஐபிஎல் ஆட்சி மன்றக் குழுதான் முடிவெடுக்கும். மாறாக அதன் ஊழியர்கள் எடுப்பதில்லை. ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களாகிய நாங்கள் எடுக்கும் முடிவை அமல்படுத்துவதுதான் ஊழியர்களின் வேலை” என்றார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அனுராக் தாக்குர், “சென்னை, ராஜஸ்தான் அணிகள் நீக்கப்படவில்லை. சஸ்பெண்ட் மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். லோதா கமிட்டியின் பரிந்துரை குறித்து ஆராய்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை வந்ததும் அடுத்த ஐபிஎல் போட்டியை சிறப்பாக நடத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராய்வோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in