

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 67.1 ஓவர்களில் 281 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது இங்கிலாந்து. இதன்மூலம் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 145 ரன்கள் முன்னிலை பெற்றது.
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 36.4 ஓவர்களில் 136 ரன்களுக்கு சுருண்டது.
அந்த அணியில் அதிகபட்ச மாக கிறிஸ் ரோஜர்ஸ் 52 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 6 விக்கெட்டுகளையும், ஸ்டூவர்ட் பிராட், ஸ்டீவன் ஃபின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து முதல் நாள் ஆட்டநேர முடிவில் 29 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோவ் 5 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ் ரன் ஏதுமின்றியும் வெளியேற, ஜோஸ் பட்லர் களம்புகுந்தார்.
மறுமுனையில் வேகமாக ஆடிய ஜோ ரூட் 49 பந்துகளில் அரைசதம் கண்டார். 75 பந்துகளைச் சந்தித்த அவர் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் ஜோஸ் பட்லர் 9 ரன்களில் வெளியேற, 190 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து.
8-வது விக்கெட்டுக்கு இணைந்த மொயீன் அலி-ஸ்டூவர்ட் பிராட் ஜோடி 87 ரன்கள் சேர்த்தது. ஸ்டூவர்ட் பிராட் 31 ரன்களிலும், மொயீன் அலி 59 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த ஆண்டர்சன் 3 ரன்களில் வெளியேற, 67.1 ஓவர்களில் 281 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து.
ஜான்சன் 300 விக்கெட்
நேற்றைய ஆட்டத்தில் ஜானி பேர்ஸ்டோவை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் தனது 300-வது விக்கெட்டை வீழ்த்தினார் ஜான்சன்.
இந்த மைல்கல்லை எட்டிய 5-வது ஆஸ்திரேலியர் ஜான்சன். ஷேன் வார்ன், மெக்ராத், டென்னிஸ் லில்லி, பிரெட் லீ ஆகியோர் மற்ற ஆஸ்திரேலியர்கள் ஆவர். ஜான்சன் தனது 69-வது போட்டியில் 300-வது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் போட்டியில் 300 விக்கெட் மற்றும் 2,000 ரன்கள் எடுத்த 12-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இந்த சாதனையை செய்த 2-வது ஆஸ்திரேலியர் ஜான்சன். முதல் வீரர் ஷேன் வார்ன் ஆவார்.