

விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஸ்விட்சார்லாந்தின் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.
முதல்நிலை வீரராக இருக்கும் ஜோகோவிச் 7-6, 6-7, 6-4, 6-3 என்ற செட்களில் ஃபெடரரை வீழ்த்தினார். கடந்த மாதம் பிரெஞ்ச் ஓபன் இறுதியின் வாவ்ரிங்காவை எதிர்த்து தோல்வி கண்ட ஜோகோவிச்சுக்கு இந்த வெற்றி உற்சாகத்தைத் தந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப் போட்டி ஃபெடரர் - ஜோகோவிச் மோதிய 40-வது போட்டியாகும்.
இதற்கு முன் 17 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள ஃபெடரர், அரையிறுதிப் போட்டியில் ஆண்டி முர்ரேவை அபாரமாக வீழ்த்தி, அந்த வெற்றியின் மூலம் அவரது விமர்சகர்களுக்கு பதிலளித்தார். ஆனால் இந்த தோல்வி பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.
வெற்றி பெற்றதும் ஆடுகளத்தில் இருந்து கொஞ்சம் புல்லை பிய்த்து சாப்பிட்டார் ஜோகோவிச். இது செர்பிய நாட்டு வழக்கமாகப் பார்க்கப்படுகிறது.
ஃபெடரர் தவறவிட்ட சாதனை
ஒருவேளை இந்த இறுதிப் போட்டியில் ஃபெடரர் வெற்றி பெற்றிருந்தால், விம்பிள்டனில் அதிகமுறை (8) பட்டம் வென்றவர் என்ற வரலாற்றைப் படைப்பதோடு, ஓபன் எராவில் விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்ற மூத்த வீரர் (33 வயது 338 நாட்கள்) என்ற பெருமையையும் பெற்றிருப்பார். விம்பிள்டனில் பட்டம் வென்ற மூத்த வீரர் என்ற சாதனை அமெரிக்காவின் ஆர்தர் ஆஷேவிடம் உள்ளது. அவர் 1975 விம்பிள்டன் போட்டியில் பட்டம் வென்றபோது அவர் 31 வயது 360 நாட்களை எட்டியிருந்தார்.
விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு முன்பு வரை, 8 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றிருந்தார் ஜோகோவிச். தனது 17-வது கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியை சந்தித்த அவர், விம்பிள்டனில் வென்று தனது கிராண்ட் ஸ்லாம் பட்டங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்த்தினார்.