Last Updated : 30 Jul, 2015 07:40 PM

 

Published : 30 Jul 2015 07:40 PM
Last Updated : 30 Jul 2015 07:40 PM

ஸ்டெய்ன், டுமினி பந்துவீச்சுக்கு கட்டுப்பட்டது வங்கதேசம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி தன் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்துள்ளது.

டேல் ஸ்டெயினின் 3-30 மற்றும் ஜே.பி.டுமினியின் 3-27 வங்கதேச அணியின் ரன் குவிப்பை தடுத்தது.

டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் மட்டுமே அரைசதம் கண்டார், இவரும், மஹமுதுல்லாவும் 4-வது விக்கெட்டுக்காக 94 ரன்களைச் சேர்த்தனர்.

ரஹிம் 125 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். இது அவரது 15-வது டெஸ்ட் அரைசதமாகும். கடந்த 12 இன்னிங்ஸ்களில் முதல் அரைசதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் தமிம் இக்பாலின் எட்ஜைத் தூண்டி டேல் ஸ்டெய்ன் தனது 400வது விக்கெட்டைக் கைப்பற்றினார்.

2-வது ஓவரிலேயே ஸ்டெய்ன், தமி இக்பாலை வீழ்த்தியிருப்பார் ஆனால் டீன் எல்கர் 2-வது ஸ்லிப்பில் கேட்சை விட்டார். ஆனால் அடுத்த முறை தமிம் கொடுத்த கேட்சை மார்புயரத்தில் முதல் ஸ்லிப்பில் பிடித்தார் ஹஷிம் ஆம்லா.

தமிம் இக்பால், ஸ்டெய்னின் 400-வது விக்கெட்டாக வீழ்ந்து ‘பெருமை’ தேடிக் கொண்டார். இப்போது விளையாடும் வீரர்களில் ஆண்டர்சன், ஹர்பஜன் ஆகியோருக்கு அடுத்ததாக ஸ்டெய்ன் 400 விக்கெட்டுகள் கிளப்பில் சேர்ந்தார்.

இம்ருல் கயேஸும், மோமினுல் ஹக்கும் இணைந்து கொஞ்சம் மீட்பு வேலைகள் செய்தனர், ஆனால் உணவு இடைவேளைக்குப் பிறகு டுமினி இருவரையும் அடுத்தடுத்து காலி செய்தார். 40 ரன்களில் இருந்த மோமினுல் எட்ஜ் செய்து வெளியேறினார். பிறகு 30 ரன்கள் எடுத்திருந்த போது இம்ருல் கயேஸும் டுமினியிடம் எல்.பி.ஆனார்.

மஹமுதுல்லா 18 ரன்களில் ஸ்டெய்னிடம் எல்.பி. ஆனபோது, மேல்முறையீடு செய்யப்பட்டதில் பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டது தெரியவந்ததால் அவுட் இல்லை என்று தீர்ப்பு மாற்றப்பட்டது.

ஆனால் அவர் 35 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டெய்ன் பந்தை நேராக ஷார்ட் மிட்விக்கெட்டில் பிளிக் செய்து டெம்பா பவுமாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ரஹிம் நன்றாக ஆடிவந்த நிலையில் பகுதி நேர ஸ்பின்னர் எல்கரின் பந்து ஒன்று கடுமையாகத் திரும்ப கிளவ்வில் பட்டு விக்கெட் கீப்பர் டேன் விலாஸிடம் கேட்ச் ஆனது.

லிட்டன் தாஸ், டுமினி பந்தை ஷார்ட் மிட்விக்கெட்டில் எல்கரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 35 ரன்கள் எடுத்த ஷாகிப் அல் ஹசன் மோர்னி மோர்கெல் பந்தை கல்லியில் எல்கரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, மொகமது ஷாகித்தை இன்றைய தின கடைசி பந்தில் ஸ்டெய்ன் பவுல்டு செய்தார்.

இந்த போட்டிக்கு குவிண்டன் டி காக் நீக்கப்பட்டு விலாஸ் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டார். வங்கதேச அணியில் தைஜுல் இஸ்லாமுக்குப் பதிலாக நசீர் சேர்க்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x