

233 பந்துகளைச் சந்தித்த அலிஸ்டர் குக் 13 பவுண்டரிகளுடன் 96 ரன்கள் எடுத்து மிட்செல் மார்ஷ் பந்தில் மட்டையில் பட்டு பவுல்டு ஆனார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-வது நாளில் தேநீர் இடைவேளையின் போது பிறகு இங்கிலாந்து அணி 83 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்து பாலோ-ஆனை தவிர்க்க போராடிக் கொண்டிருந்தது.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 149 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 566 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் 215 ரன்களும், கிறிஸ் ரோஜர்ஸ் 173 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 29 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் குக் 21, பென் ஸ்டோக்ஸ் 38 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
பென் ஸ்டோக்ஸ் 87
3-வது நாளான இன்று தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியில் 67 பந்துகளில் அரைசதம் கண்டார் பென் ஸ்டோக்ஸ். மறுமுனையில் நிதானமாக ஆடிய குக் 142 பந்துகளில் அரைசதம் கண்டார். இந்த ஜோடியைப் பிரிக்க கடுமையாகப் போராடிய ஆஸ்திரேலியாவுக்கு 55-வது ஓவரில் பலன் கிடைத்தது. மார்ஷ் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் பென் ஸ்டோக்ஸ் போல்டு ஆனார். அவர் 128 பந்துகளில் 1 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் எடுத்தார். அப்போது இங்கிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்திருந்தது.
அலிஸ்டர் குக் 96 அவுட்
இதையடுத்து வந்த ஜோஸ் பட்லர் 13 ரன்களில் வெளியேற, குக்குடன் இணைந்தார் மொயீன் அலி. இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தது. சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட குக் 96 ரன்கள் எடுத்திருந்தபோது மார்ஷ் பந்துவீச்சில் போல்டு ஆனார். தேநீர் இடைவேளையின்போது 83 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்திருந்தது இங்கிலாந்து. மொயீன் அலி 38, ஸ்டூவர்ட் பிராட் 5 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
ஆஸ்திரேலியத் தரப்பில் மிட்செல் மார்ஷ், மிட்செல் ஜான்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.