Last Updated : 22 Jul, 2015 09:37 AM

 

Published : 22 Jul 2015 09:37 AM
Last Updated : 22 Jul 2015 09:37 AM

இந்தியா- ஆஸி. ஏ அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் சென்னையில் இன்று தொடக்கம்

இந்தியா-ஆஸ்திரேலியா ஏ அணி கள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது. இது 4 நாள் போட்டியாகும்.

முன்னாள் கேப்டன் ராகுல் திராவிடின் பயிற்சியின்கீழ் இந்திய ஏ அணி பங்கேற்கும் முதல் தொடர் இது. அதனால் இந்தத் தொடரின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

புஜாரா தீவிரம்

இந்திய அணியின் கேப்டனான சேதேஷ்வர் புஜாரா, இந்தத் தொடரில் பெரிய அளவில் ரன் குவித்து மீண்டும் இந்திய சீனியர் இடம்பிடிப்பதில் தீவிரமாக உள்ளார். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் தடுமாறிய அவர், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமபலம் கொண்ட இந்தியா

இந்திய அணி அனுபவ வீரர்கள், இளம் வீரர்கள் என சமபலம் பொருந்திய அணியாக உள்ளது. கே.எல்.ராகுல், அபினவ் முகுந்த், அமித் மிஸ்ரா, பிரக்யான் ஓஜா ஆகியோரும் தங்களின் திறமையை நிரூபிக்க இந்தத் தொடர் நல்ல வாய்ப்பாகும்.

ஆஸ்திரேலிய சீனியர் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல், இந்தத் தொடரில் பெரிய அளவில் ரன் குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் போட்டியில் அசத்தலாக ஆடிய அபினவ் முகுந்த், விஜய் சங்கர், பாபா அபராஜித் ஆகியோர் இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடுவார்கள் என நம்பலாம்.

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் வருண் ஆரோன் உடல்நலக்குறைவால் இந்த போட்டியிலிருந்து விலகியிருப்பதால் உமேஷ் யாதவ், அபிமன்யூ மிதுன் ஆகியோரையே நம்பியுள்ளது இந்திய அணி. சுழற்பந்து வீச்சில் அமித் மிஸ்ரா, பிரக்யான் ஓஜா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

பலம் வாய்ந்த ஆஸி.

ஆஸ்திரேலிய கேப்டன் உஸ்மான் கவாஜா காயத்திலிருந்து மீண்ட பிறகு விளையாடவுள்ள முதல் தொடர் இதுவாகும். 2013 ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக ஆடிய கவாஜா, கடந்த ஆண்டு உள்ளூர் போட்டியில் குயின்ஸ்லாந்து அணிக்காக 523 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கவாஜா தவிர, ஜோ பர்ன்ஸ், விக்கெட் கீப்பர் மேத்யூ வேட், நிக் மேடின்சன், ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோரும் பெரிய அளவில் ரன் குவிக்கும் ஆற்றல் பெற்றவர்கள்.

ஆஸ்திரேலிய அணி பலம் பொருந்திய பந்துவீச்சாளர்களைக் கொண்டுள்ளது. ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்கள் ஆஷ்டன் அகர், ஸ்டீபன் ஓ’கீப் ஆகியோர் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான சேப் பாக்கம் மைதானத்தில் தங்களின் பந்துவீச்சை மெருகேற்றிக் கொள்ள இந்தத் தொடர் நல்ல வாய்ப்பாகும்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x