

சர்வதேச ஹாக்கி தரவரிசையில் இந்திய ஆடவர் அணி ஓர் இடம் முன்னேறி 8-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய மகளிர் அணி தொடர்ந்து 13-வது இடத்தில் உள்ளது.
பியூனஸ் அயர்ஸ், அன்ட்வெர்ப், வேலன்சியா நகரங்களில் நடை பெற்ற உலக ஹாக்கி லீக் அரை யிறுதி போட்டிகளைத் தொடர்ந்து புதிய ஹாக்கி தரவரிசையை வெளியிட்டுள்ளது சர்வதேச ஹாக்கி சம்மேளனம்.
உலக ஹாக்கி லீக் அரையிறுதியில் 4-வது இடத்தைப் பிடித்ததன் மூலம் இந்திய ஆடவர் அணி ஓர் இடம் முன்னேற்றம் கண்டிருக்கிறது. நடப்பு உலக சாம்பியனான ஆஸ்திரேலியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2014 உலகக் கோப்பையில் 2-வது இடத்தைப் பிடித்த நெதர்லாந்து அணி 2-வது இடத்திலும், ஒலிம்பிக் சாம்பியனான ஜெர்மனி 3-வது இடத்திலும் உள்ளன. பெல்ஜியம் 4-வது இடத்திலும், இங்கிலாந்து 5-வது இடத்திலும் உள்ளன.
அர்ஜெண்டினா, நியூஸிலாந்து அணிகளின் தரவரிசையில் எந்த மாற்றமும் இல்லை. அந்த அணி கள் முறையே 6 மற்றும் 7-வது இடங்களில் உள்ளன. இந்தியா 8-வது இடத்திலும், தென் கொரியா 9-வது இடத்திலும், பாகிஸ்தான் 10-வது இடத்திலும் உள்ளன.
மகளிர் தரவரிசையைப் பொறுத்தவரையில் நெதர்லாந்து தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா, நியூஸிலாந்து அணிகளின் தரவரிசையில் எந்த மாற்றமும் இல்லை. அவை முறையே 2, 3, 4-வது இடங்களில் உள்ளன. 5-வது இடத்திலிருந்த அமெரிக்கா 3 இடங்களை இழந்து 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.