Last Updated : 07 Jul, 2015 10:00 AM

 

Published : 07 Jul 2015 10:00 AM
Last Updated : 07 Jul 2015 10:00 AM

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து: அமெரிக்கா 3-வது முறையாக சாம்பியன்- கார்லி லாய்ட் ஹாட்ரிக் கோலடித்து புதிய சாதனை

கனடாவில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் அமெரிக்கா 5-2 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் ஜாப்பானை தோற்கடித்து சாம்பியன் ஆனது.

இதற்கு முன்னர் 1991, 1999 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றிருந்த அமெரிக்கா, இப்போது 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் மகளிர் உலகக் கோப்பை போட்டியில் அதிக முறை கோப்பை யைக் கைப்பற்றிய அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

கடந்த உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஜப்பானிடம் கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுத்துள்ளது. இதுதவிர உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஹாட்ரிக் கோலடித்த முதல் வீராங் கனை என்ற பெருமை அமெரிக் காவின் கார்லி லாய்டுக்கு கிடைத் துள்ளது.

கனடாவின் வான்கோவர் நகரில் நேற்று நடைபெற்ற இந்த இறுதி ஆட்டம் மிகப்பெரிய எதிர் பார்ப்புக்கு உள்ளாகியிருந்தது. ஆனால் ஆரம்பத்திலேயே அபாரமாக ஆடிய அமெரிக்கா, கோல் மழை பொழிந்தது. 3-வது நிமிடத்தில் அமெரிக்காவின் முதல் கோலை அடித்த கார்லி லாய்ட், 5-வது நிமிடத்தில் அடுத்த கோலை அடித்து அமெரிக்காவை 2-0 என முன்னிலை பெற வைத்தார்.

தொடர்ந்து அபாரமாக ஆடிய அந்த அணி 14-வது நிமிடத்தில் 3-0 என முன்னிலை பெற்றது. இந்த முறை ஹாலிடே கோலடித்தார். அடுத்த 2-வது நிமிடத்தில் (அதாவது 16-வது நிமிடம்) லாய்ட் தனது ஹாட்ரிக் கோலை அடிக்க, அமெரிக்கா 4-0 என வலுவான நிலையை எட்டியது. அமெரிக்கா வின் கோல் மழையால் கடும் நெருக்கடிக்குள்ளான ஜப்பான் 27-வது நிமிடத்தில் கோலடித்தது. இந்த கோலை அந்த அணியின் யூகி ஒஜிமி அடித்தார். முதல் பாதி ஆட்டநேர முடிவில் அமெரிக்கா 4-1 என முன்னிலையில் இருந்தது.

தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 52-வது நிமிடத்தில் அமெரிக்க வீராங்கனை ஜூலி ஜான்ஸ்டன் அடித்த ‘ஓன் கோல்’ மூலம் ஜப்பானுக்கு 2-வது கோல் கிடைத்தது. இதன்பிறகு 54-வது நிமிடத்தில் டோபின் ஹெத் கோலடிக்க, அமெரிக்கா 5-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் கோல் எதுவும் விழாத நிலையில் அமெரிக்கா வெற்றி கண்டது.

இந்தப் போட்டி 53,341 ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அங்கிருந்த ரசிகர்கள் அனை வரும் அமெரிக்கா, அமெரிக்கா, அமெரிக்கா என உரக்கக் கத்தி அந்த அணியை உற்சாகப்படுத்தினர்.

பெரிய போட்டிகளின் இறுதிச் சுற்றில் அமெரிக்காவும், ஜப்பானும் மோதியது இது 3-வது முறை யாகும். இதற்கு முன்னர் 2012 ஒலிம்பிக் போட்டியின் இறுதிச் சுற்றில் இவ்விரு அணிகளும் மோதின. அதில் அமெரிக்கா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. அந்தப் போட்டியில் அமெரிக்காவின் இரு கோல்களை யும் லாய்ட்தான் அடித்தார்.

சாதனைகள்…

இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 52 ஆட்டங்கள் நடைபெற்றன. அதில் 146 கோல்கள் அடிக்கப்பட்டன. ஒரு போட்டியில் அடிக்கப்பட்ட கோல் சதவீதம் 2.81 ஆகும். 52 ஆட்டங்களைக் காண மொத்தம் 13 லட்சத்து 53 ஆயிரத்து 506 ரசிகர்கள் மைதானத்துக்கு வந்தனர்.

ஜெர்மனியின் சீலியா சாசிச், அமெரிக்காவின் கார்லி லாய்ட் ஆகியோர் தலா 6 கோல்களுடன் அதிக கோலடித்தவர்கள் என்ற பெருமையைப் பெற்றனர். சிறந்த வீராங்கனையாக அமெரிக்காவின் கார்லி லாய்ட்டும், சிறந்த இளம் வீராங்கனையாக கனடாவின் கேதிஷா புச்சானனும் தேர்வு செய்யப்பட்டனர். சிறந்த கோல் கீப்பராக அமெரிக்காவின் ஹோப் சோலா தேர்வு செய்யப்பட்டார். பிரான்ஸ் அணி ஃபேர் பிளே விருதை தட்டிச் சென்றது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x