

ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 118 பந்துகளில் சதம் அடித்து இங்கிலாந்து அணியை 43/3 என்ற நிலையிலிருந்து மீட்டுள்ளார்.
ஜோ ரூட் களமிறங்கி 2-வது பந்தில் எட்ஜ் செய்ய கேட்சை பிராட் ஹேடின் கோட்டைவிட்டார். இதன் பலனை ஆஸ்திரேலியா தற்போது அனுபவித்து வருகிறது. அப்போது அந்தக் கேட்சை ஹேடின் பிடித்திருந்தால் இங்கிலாந்து இந்நேரத்தில் தடுமாறிக் கொண்டிருக்கும். குறைந்த ரன்களுக்கு ஆல் அவுட் ஆகும் வாய்ப்பிலிருந்து இங்கிலாந்தை மீட்ட பெருமை பிராட் ஹேடினையே சாரும்.
உணவு இடைவேளைக்குப் பிறகு தேநீர் இடைவேளை வரை ஆஸ்திரேலியாவினால் ஜோ ரூட், கேரி பேலன்ஸ் ஆகியோரை வீழ்த்த முடியவில்லை. 88/3-லிருந்து 190/3 என்று இங்கிலாந்து உயர்ந்தது.
நேதன் லயன் பந்தில் ஒரு முறை ஸ்வீப் ஆட முயன்று கால்காப்பில் வாங்கினார் ரூட். கடும் முறையீடு எழுந்தது நடுவர் நாட் அவுட் என்றார். அப்போது கேப்டனாக இருந்த ஸ்மித் ரிவியூ செய்தார், பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகியிருந்தது, எனவே விதிமுறைகளின் படியே நாட் அவுட். ஆனால் பந்து ஸ்டம்ப்க்ளை தாக்கியது. ஆனால் லெக் ஸ்டம்புக்கு வெளியே ரவுண்ட் த விக்கெட்டில் பிட்ச் ஆனதால் நாட் அவுட் ஆனது.
அதன் பிறகு ரூட் அற்புதமான சில ஷாட்களை ஆடினார். அரைசதத்தை 56 பந்துகளில் எடுத்த ரூட், தேநீர் இடைவேளையின் போது 93 ரன்கள் எடுத்திருந்தார்.
கேரி பேலன்ஸ், திருப்திகரமாக ஆடவில்லை என்றாலும் அவர் அவுட் ஆகாமல் ஆடியதால் இருவரும் இணைந்து 4-வது விக்கெட்டுக்காக 39 ஓவர்களில் 153 முக்கிய ரன்களைச் சேர்த்தனர். ஜான்சனின் ரவுண்ட் த விக்கெட் பவுன்சரில் இருமுறை பந்து மட்டையில் பட்டு எங்கு சென்றது என்பது பேலன்ஸுக்கே தெரியவில்லை. ‘பேலன்ஸ்’ தவறிவிட்டார்.
கேரி பேலன்ஸ் 61 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஷ் ஹேசில்வுட் ஒரு பந்தை ஆங்கிளாக உள்ளே கொண்டு வந்தார். பிளிக் ஆட முயன்று தோல்வியடைய பந்து கால்காப்பைத் தாக்க தர்மசேனா அவுட் கொடுத்தார்.
அதன் பிறகு 56-வது ஓவரை ஜோஷ் ஹேசில்வுட் வீச ஓவர் பிட்ச் பந்தை ஸ்கொயர் டிரைவ் செய்து பவுண்டரி மூலம் தனது 7-வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். 118 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் அவர் சதம் எடுத்தார். சதம் எடுத்ததை கொண்டாடும் விதமாக அற்புதமான ஒரு நேர் டிரைவை அதே ஓவரில் அடித்தார்.
பேலன்ஸ் ஆட்டமிழந்ததையடுத்து பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினார், ஜான்சன் வீசிய ஆஃப் திசை பவுன்சரை ஹூக் செய்ய டாப் எட்ஜ் நேராக பந்தை சிக்சருக்கு கொண்டு சென்றது. அவர் தற்போது 14 ரன்களுடனும், ஜோ ரூட் 115 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். இங்கிலாந்து இன்று இன்னமும் 30 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது.