

இரண்டாவது முறையாக முறையற்ற பந்துவீச்சுக்காக பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் மொகமது ஹபீஸ் மீது புகார் எழுந்ததால் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் பந்துவீச 12 மாதங்களுக்கு தடை விதித்துள்ளது ஐசிசி.
நவம்பர் 2014-க்குப் பிறகு 2-வது முறையாக அவர் த்ரோ செய்வதாக புகார் எழுந்த நிலையில் அவர் பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் இலங்கைக்கு எதிரான கால்லே மைதான டெஸ்ட் போட்டியின் போது இவர் பந்துவீச்சு மீது ‘த்ரோ’ புகார் எழ, சென்னையில் ஐசிசி அங்கீகாரம் பெற்ற பரிசோதனை மையத்தில் அவரது பந்துவீச்சு சோதிக்கப்பட்டது. அப்போது அவரது முழங்கை அனுமதிக்கப்பட்ட 15 டிகிரி அளவைக் காட்டிலும் அதிகமாக மடங்கியது தெரியவந்தது.
முதல் முறை புகார் தெரிவிக்கப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்னதாக 2-வது முறை புகார் எழுந்ததால் தடை உத்தரவு தானாகவே அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் 12 மாதங்கள் அவர் பந்து வீச தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர் தனது பந்துவீச்சை இந்த ஓராண்டு கால தடைக்குப் பிறகே மறுமதிப்பீடு செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.