

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஸ்பாட் பிக்ஸிங் முறைகேடு வழக்கில் இருந்து இந்திய பந்து வீச்சாளர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவாண், அஜீத் சண்டிலா ஆகியோரை டெல்லி நீதிமன்றம் நேற்று விடுவித்தது.
2013 மே மாதம் ஐபிஎல் தொடரின் போது ஸ்பாட் பிக்ஸிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ் தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த பந்து வீச்சாளர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவாண், அஜீத் சண்டிலா ஆகியோரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் சூதாட் டத்தில் தொடர்புடைய மேலும் 33 பேர் கைது செய்யப்பட்டனர். வீரர்கள் மீதான குற்றச்சாட்டை விசாரித்த இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2013-ம் ஆண்டு செப்டம்பரில் ஸ்ரீசாந்த், அங்கீத் சவாண் ஆகியோர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாழ்நாள் தடை விதித்தது. அஜீத் சண்டிலா விவகாரம் பிசிசிஐ ஒழுங்குமுறை கமிட்டி முன்பு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் 3 வீரர்கள் உட்பட 36 பேர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்து வந்த டெல்லி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அப்போது இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் வழக்கில் இருந்து விடுவிப்பதாகவும், குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் கூடுதல் அமர்வு நீதிபதி நீனா பன்சல் கூறினார். முன்னதாக இந்த வழக்கில் போலீஸார் 6 ஆயிரம் பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
தீர்ப்பின்போது குற்றம்சாட்டப் பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் இருந்தனர். தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்ததை அடுத்து ஒருவரையொருவர் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீசாந்த், “எனக்கு நீதி கிடைத்து விட்டது. இது கடவுளின் செயல். நான் கிரிக்கெட்டுக்குத் திரும்ப முடியும். எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் உடனடி யாக முறையான பயிற்சிக்குத் திரும்பவுள்ளேன். பிசிசிஐ எனக்கு அனுமதி அளிக்கும் என்று நம்புகிறேன். பிசிசிஐ வசதிகளைப் பயன்படுத்தி உடல் தகுதி நிலைகளை சரிசெய்து கொண்டு அணித் தேர்வுக்கு தயாராகிவிடுவேன்” என்றார்.
ஸ்பாட் பிக்ஸிங் வழக்கில் டெல்லி போலீஸின் சிறப்பு பிரிவு மொத்தம் 42 பேர் மீது குற்றம்சாட்டியிருந்தது. இதில் 6 பேர் தலைமறைவாகிவிட்டனர். ஸ்ரீசாந்த், அங்கீத் சவாண், அஜீத் சண்டிலா ஆகியோர் சிறிது காலம் சிறையில் இருந்தனர்.
ஐபிஎல் போட்டியின்போது சூதாட்ட தரகர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு நோ பால், வைடு பந்துகளை வீசினார்கள் என்பது இந்த 3 வீரர்கள் மீதான குற்றச்சாட்டு.