Published : 17 Jul 2015 09:39 AM
Last Updated : 17 Jul 2015 09:39 AM

இந்தியா-ஜிம்பாப்வே முதல் டி20: ஹராரேவில் இன்று நடக்கிறது

இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான இரு போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் இன்று நடக்கிறது.

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி, இந்தத் தொடரிலும் அந்த அணியை ‘ஒயிட் வாஷ்’ ஆக்கும் முனைப்பில் களமிறங்குகிறது. ஆனால் சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்திருக்கும் ஜிம்பாப்வே அணியோ, டி20 தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.

இந்திய அணியைப் பொறுத்த வரையில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் வலுவாக உள்ளது. இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் ஐபிஎல் போட்டியில் விளையாடி வரும் முன்னணி வீரர்கள் என்பது கூடுதல் பலமாகும். ஒருநாள் தொடரைப் போலவே இந்தப் போட்டியிலும் அஜிங்க்ய ரஹானே-முரளி விஜய் ஜோடிதான் இந்தியாவின் இன்னிங்ஸை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிடில் ஆர்டரைப் பொறுத்த வரையில் ராபின் உத்தப்பா, மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், மனோஜ் திவாரி, ஸ்டூவர்ட் பின்னி ஆகியோர் பலம் சேர்க் கின்றனர். ஒருவேளை சஞ்சு சாம்சன் இடம்பெறும்பட்சத்தில் திவாரி நீக்கப்படலாம். கடைசி ஒருநாள் போட்டியில் சதமடித்த கேதார் ஜாதவ், 71 ரன்கள் எடுத்த மணீஷ் பாண்டே ஆகியோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பெரிய அளவில் ரன் சேர்க்க முயற்சிப்பார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது.

வேகப்பந்து வீச்சைப் பொறுத்த வரையில் புவனேஸ்வர் குமார், தவல் குல்கர்னி ஆகியோ ரையும், சுழற்பந்து வீச்சில் ஹர்பஜன், அக் ஷர் படேல் கூட்டணியையும் நம்பியுள்ளது இந்தியா. ஜிம்பாப்வே அணியைப் பொறுத்தவரையில் சிபாபா, மஸகட்ஸா, கேப்டன் சிகும்பரா ஆகியோரையே பேட்டிங்கில் நம்பியுள்ளது. இவர்கள் சிறப்பாக ஆடினாலொழிய அந்த அணி நல்ல ஸ்கோரை குவிப்பது கடினம். அதேநேரத்தில் அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் நம்பிக்கையளிக்கின்றனர். டிரிப்பானோ, மட்ஸிவா ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியா:

அஜிங்க்ய ரஹானே (கேப்டன்), ராபின் உத்தப்பா (விக்கெட் கீப்பர்), முரளி விஜய், ஸ்டூவர்ட் பின்னி, மனோஜ் திவாரி, ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ், தவல் குல்கர்னி, புவனேஸ்வர் குமார், மணீஷ் பாண்டே, அக் ஷர் படேல், சந்தீப் சர்மா, சஞ்சு சாம்சன், மோஹித் சர்மா.

ஜிம்பாப்வே:

எல்டான் சிகும்பரா (கேப்டன்), ரெஜிஸ் சகாப்வா, சாமு சிபாபா, கிரீம் கிரெமர், நெவில் மட்ஸிவா, ஹாமில்டன் மஸகட்ஸா, ரிச்மான்ட் முதும்பாமி, டினாஷ் பன்யங்காரா, சிக்கந்தர் ராஸா, டொனால்டு டிரிப்பானோ, உட்சேயா, பிரையன் விட்டோரி, மால்கம் வாலர், சீன் வில்லியம்ஸ்.

இதுவரை…

இவ்விரு அணிகளும் இதுவரை 2 போட்டிகளில் மோதியுள்ளன. அந்த இரண்டிலும் இந்தியாவே வெற்றி கண்டுள்ளது.

போட்டி நேரம்: மாலை 4.30

நேரடி ஒளிபரப்பு: டென் கிரிக்கெட்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x