

பாகிஸ்தானுக்கு எதிராக பந்துவீசு வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக இலங்கை அணிக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) அபராதம் விதித்துள்ளது.
பாகிஸ்தான் அணி இலங்கை யில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் இப்போட்டியில் இலங்கை அணி, பந்துவீசுவதற்கு கூடுதலாக ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டது. இதையடுத்து அந்த அணியின் தலைவர் ஆஞ்சலோ மேத்யூஸுக்கு போட்டி ஊதியத்திலிருந்து 20 சதவீதம் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. அணியின் மற்ற வீரர்களுக்கு தலா 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என ஐசிசி அறிவித்துள்ளது.
“மேத்யூஸ் தனது தவறை ஒப்புக் கொண்டார். அபராதம் செலுத்தவும் சம்மதித்துள்ளார். எனவே, மேற்கொண்டு விசாரணை தேவையில்லை” என ஐசிசி போட்டி நடுவர் கிறிஸ் பிராட் தெரிவித்துள்ளார்.
இலங்கை பாகிஸ்தான் இடையிலான 3-வது டெஸ்ட் வரும் வெள்ளிக்கிழமை பல்லேகெ லேவில் நடைபெறவுள்ளது.