சிட்டகாங் டெஸ்ட்: 4-வது நாளில் விளையாடியது மழை

சிட்டகாங் டெஸ்ட்: 4-வது நாளில் விளையாடியது மழை
Updated on
1 min read

வங்கதேசம்-தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் கிரிக் கெட் போட்டியின் 4-வது நாள் ஆட்டம் நேற்று பெய்த மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது.

வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 83.4 ஓவர்களில் 248 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேசம் 116.1 ஓவர்களில் 326 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முதல் இன்னிங்ஸில் 78 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 21.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக 3-வது நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. வான் ஸில் 33, எல்கர் 28 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

நேற்று நடைபெறவிருந்த 4-வது நாள் ஆட்டம் மழை காரணமாக முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து பிற்பகல் 1.25 மணிக்கு 4-வது நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

வங்கதேசத்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட தென் ஆப்பிரிக்கா இன்னும் 17 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் விக்கெட்டை விரைவாக வீழ்த்த வங்கதேசம் முயற்சிக்கும். அதேநேரத்தில் தென் ஆப்பிரிக்க அணி நிதான மாக ஆடி போட்டியை டிராவில் முடிப்பதில் தீவிரம் காட்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in