

சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் பந்துவீச்சு குறித்து இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
என்.டி.டிவி-யில் சுனில் கவாஸ்கர் பேட்டியளித்த போது, “இந்திய அணி எதிர்பார்க்கும் அடுத்த பெரிய ஸ்பின்னர் என்று அக்சர் படேலைக் கூற முடியாது. அவர் பந்தை சும்மா உருட்டுகிறார், அவரிடம் பிளைட் இல்லை, அவரது பந்துகள் எளிதில் கணித்துவிடக் கூடியதாகவே உள்ளது. பிட்ச் உதவி செய்தாலே தவிர அவரால் பந்துகளை திருப்பவே முடியவில்லை. ஒரு மிதவேகப்பந்து வீச்சாளரை விட மெதுவாக வீசுகிறார் அவ்வளவே.
ஆம்! அஸ்வின், ஹர்பஜன் சிங், அமித் மிஸ்ரா, கரண் சர்மாவிடம்தான் நாம் அதிகம் எதிர்பார்க்க முடியும். நிச்சயம் அக்சர் படேலை எதிர்பார்க்க முடியாது” என்றார் சுனில் கவாஸ்கர்.
18 ஒருநாள் போட்டிகளில் அக்சர் படேல் 23 விக்கெட்டுகளை 26.60 என்ற சராசரியின் கீழ் ஓவருக்கு 4.59 என்ற சிக்கன ரன்விகித்தில் எடுத்துள்ளார். இது கவாஸ்கர் கூறும் அளவுக்கு மோசமான புள்ளி விவரம் அல்ல என்றாலும், ஒரு அனுபவமிக்க வீரராக, இந்தியாவின் பந்துவீச்சில் ஸ்பின் கோலோச்சிய காலத்தில் விளையாடிய சுனில் கவாஸ்கரின் விமர்சனத்தை அக்சர் படேல் சீரியசாக எடுத்துக் கொண்டு அவரது வாதங்களை முறியடிக்க வேண்டும் என்பதே கவாஸ்கரின் விருப்பமாக இருக்கலாம்.
அவர் மேலும் கூறும் போது, “கடந்த சில ஆண்டுகளாகவே தரமான ஸ்பின்னர்களுக்கு இந்திய அணி போராடி வருகிறது. ரஞ்சி டிராபி போட்டிகளுக்கு அளிக்கப்படும் பிட்ச்கள் ஒரு காரணமாக இருக்கலாம். தற்போதைய பிட்ச்களில் நிறைய புல் வளர்க்கப்படுகிறது, இது ஸ்பின்னர்களுக்கு உதவாது.
புல் இருக்கலாம், ஆனால் அளவுக்கு அதிகமாக இருக்கக் கூடாது. ஆட்டத்தின் தொடக்க தினங்களில் ஸ்பின்னர்கள் தங்கள் பிளைட் பந்துகளை பயன்படுத்துமாறு பிட்ச் அமைக்கப்பட வேண்டும்” என்றார்.