

பேட் கேஸ்டின் டபிள்யூடிஏ டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை சமந்தா ஸ்டோசர் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆஸ்திரியாவின் பேட் கேஸ்டின் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சமந்தா 3-6, 7-6 (3), 6-2 என்ற செட் கணக்கில் இத்தாலியின் கரின் நாப்பை தோற்கடித்தார்.
விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 3-6 என்ற கணக்கில் இழந்த சமந்தா, பின்னர் நடைபெற்ற 2-வது செட்டில் அபாரமாக ஆடினார். மறுமுனையில் நாப் விடாப்பிடியாக போராட, அந்த செட் டைபிரேக்கர் வரை சென்றது. அதிலும் கடுமையாகப் போராடிய சமந்தா 7-6 (2) என அந்த செட்டை கைப்பற்றினார்.
இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்கும் 3-வது செட் நடைபெற்றது. அதில் ஆரம்பம் முதலே அசத்தலாக ஆடிய சமந்தா, அந்த செட்டை 6-2 என கைப்பற்றி சாம்பியன் ஆனார். இது அவர் வென்ற 8-வது சாம்பியன் பட்டமாகும்.
வெற்றி குறித்துப் பேசிய சமந்தா, “இந்த இறுதி ஆட்டம் மிகக் கடுமையான ஆட்டமாகும். முதல் செட்டில் முற்றிலுமாக நான் வீழ்த்தப்பட்டேன். 2-வது செட்டில் நாப் அபாரமாக ஆடியபோதும், நான் கொஞ்சம் சிறப்பாக ஆடுவது போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது. 2-வது செட்டில் ஒரு கட்டத்தில் இக்கட்டான சூழலில் இருந்து மீண்ட பிறகு சிறப்பாக ஆட ஆரம்பித்தேன்.
மழை காரணமாக என்னுடைய அரையிறுதி ஆட்டம் ஒத்தி வைக்கப்பட்டதால், அரையிறுதி, இறுதியாட்டம் என இரண்டையும் ஒரே நாளில் ஆடவேண்டிய நிலை ஏற்பட்டது. காலையில் இரண்டரை மணி நேரம் விளையாடிவிட்டு, பிற்பகலில் மீண்டும் இரண்டரை மணி நேரம் விளையாட வேண்டியதிருந்ததால் கடினமாக இருந்தது” என்றார்.