

பவுன்சரில் தலையில் அடிபட்டு அகால மரணமடைந்த ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூஸின் இறப்பு தனது பந்துவீச்சின் வேகத்தை வெகுவாகப் பாதித்தது என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் கூறியுள்ளார்.
ஏபிசி செய்திக்கு அவர் கூறும்போது, “சாக்குப் போக்குகள் கூறும் நபர் நான் அல்ல. பிலிப் ஹியூஸிற்கு நிகழ்ந்தது எங்களது கடினப்பாட்டை அதிகரித்தது. இது போன்ற விவகாரங்களை எப்படி சந்திப்பது என்றே சில வேளைகளில் புரிவதில்லை.
அந்த தருணத்தில் நாங்கள் சரியான தயாரிப்பு செய்து கொள்ளவில்லை. என்னுடைய வேகம் நிச்சயமாக பிலிப் ஹியூஸ் மரணத்தினால் குறைந்துதான் போனது.
அந்தத் தருணத்தில் நான் எனது முழு ஆக்ரோஷ மனநிலையில் இல்லை” என்றார் ஜான்சன்.
இந்தியாவுக்கு எதிரான அந்தத் தொடரில் அவரது பந்துகளில் ஆஷஸ் தொடரில் இருந்த வீரியமும், வேகமும் இல்லை என்று பரவலாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் ஆஷஸ் தொடருக்காக இங்கிலாந்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி முதல் பயிற்சி ஆட்டத்தில் கெண்ட் அணியை எதிர்கொண்டது. இதில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் மிட்செல் ஜான்சன். கடந்த ஆஷஸ் தொடரில் 37 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, ஜானதன் டிராட், பீட்டர்சன் உள்ளிட்டோரின் டெஸ்ட் வாழ்க்கையையே முடிவுக்குக் கொண்டு வந்தார் ஜான்சன்.
கெண்ட் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஜான்சன் வீசிய வேகத்தைப் பார்த்த அந்த அணியின் மூத்த வீரர் ராபர்ட் கீ (இவர் முதல் இன்னிங்சில் 108 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார்) “ஜான்சனை எதிர்கொள்ளும் அளவுக்கு எனக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை” என்று ஜோக் அடித்தார்.