Published : 18 Jun 2015 09:39 AM
Last Updated : 18 Jun 2015 09:39 AM

முதல் ஒருநாள் ஆட்டம்: இந்தியா-வங்கதேசம் இன்று மோதல்

இந்தியா-வங்கதேசம் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிகெட் தொடரின் முதல் ஆட்டம் வங்கதேசத்தின் மிர்பூரில் இன்று நடக்கிறது.

இவ்விரு அணிகள் இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில் இப்போது இரு அணிகளும் ஒருநாள் தொடரில் களமிறங்குகின்றன. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதி வரை முன்னேறிய இந்திய அணி, அதன்பிறகு விளையாடும் ஒருநாள் போட்டி இதுதான். இன்றைய ஆட்டத்தில் வென்று இந்தத் தொடரை சிறப்பாக தொடங்கும் முனைப்பில் உள்ளது இந்தியா.

உலகக் கோப்பை காலிறுதியில் இந்தியாவிடம் தோல்வி கண்ட வங்கதேச அணி, அதற்கு பதிலடி கொடுக்க இந்தத் தொடர் நல்ல வாய்ப்பாகும். இதேபோல் சாம்பியன்ஸ் டிராபியில் விளை யாடுவதற்கான வாய்ப்பைப் பெறு வதற்கும் இந்தத் தொடர் வங்கதேசத் துக்கு உதவும். உலகக் கோப்பை காலிறுதியில் இந்தியாவுக்கு சாதகமாக நடுவர் நடந்து கொண்ட தாகக் கூறி வங்கதேச அணியி னரும், அப்போதைய ஐசிசி தலை வரான முஸ்தபா கமாலும் (வங்கதேசத்தைச் சேர்ந்தவர்) குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத் தக்கது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் வங்கதேசத்துடனான ஒருநாள் தொடரில் விளையாடிய இந்திய அணியும், தற்போதைய இந்திய அணியும் முற்றிலும் வித்தியாச மானவை. அப்போது வங்கதேசத் துக்கு எதிராக விளையாடிய இந்திய அணியில் 8 முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை அவர்களில் 7 பேர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணியைப் பொறுத்த வரையில் ஷிகர் தவன், ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, கேப்டன் தோனி, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், மோஹித் சர்மா ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் ஸ்டூவர்ட் பின்னி, தவல் குல்கர்னி ஆகியோர் பரீட்சார்த்த முறையில் ஏதாவது ஒரு போட்டியில் களமிறக்கப்படலாம் என தெரிகிறது.

வங்கதேச அணி சமீப காலங் களில் சிறப்பாக விளையாடியுள் ளது. அதிலும் எளிதில் கணிக்க முடியாத அணியான பாகிஸ் தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. அதனால் அந்த அணியை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.

அந்த அணி தமிம் இக்பால், முஷ்பிகுர் ரஹிம், மோமினுல் ஹக், ஷகிப் அல்ஹசன், சபீர் ரஹ்மான், சவும்ய சர்க்கார் என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. இவர்களில் சர்வதேச தரவரிசையில் 18-வது இடத்தில் இருக்கும் முஷ்பிகுர் ரஹிம், இந்தத் தொடரிலும் அதிரடியாக ரன் குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மூத்த ஆல்ரவுண்டரான அல்ஹசன் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் தொடர்ந்து அசத்தி வருகிறார்.

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் டாஸ்கின் அஹமது மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த ஜூனில் இந்தியா வுக்கு எதிராக அறிமுகமான அவர், அதே போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுமட்டுமின்றி உலகக் கோப்பை காலிறுதியில் இந்தியாவுக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஹமது தவிர, ரூபெல் ஹுசைன், கேப்டன் மோர்ட்டஸா உள்ளிட்டோரும் வேகப்பந்து வீச்சில் பலம் சேர்க்கின்றனர்.

இந்தியா:

எம்.எஸ்.தோனி (கேப்டன்), ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே, ஷிகர் தவன், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக் ஷர் படேல், புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், மோஹித் சர்மா, ஸ்டூவர்ட் பின்னி, தவல் குல்கர்னி.

வங்கதேசம்:

மோர்ட்டஸா (கேப்டன்), தமிம் இக்பால், சவும்ய சர்க்கார், மோமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹிம், ஷகிப் அல்ஹசன், சபீர் ரஹ்மான், நாசிர் ஹுசைன், அராஃபட் சன்னி, டாஸ்கின் அஹமது, ரூபெல் ஹுசைன், ரோனி தலுக்தார், முஸ்தாஃபிஸுர் ரஹ்மான், லிட்டன் தாஸ்.

மிரட்டும் மழை…

போட்டி நடைபெறும் மிர்பூரில் இன்று 40 சதவீத மழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனினும் டெஸ்ட் போட்டி அளவுக்கு இந்தப் போட்டி பாதிக்கப்படாது என தெரிகிறது. மேலும் மழையைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஒருநாள் போட்டிக்கும் கூடுதலாக ஒரு நாள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனால் இன்று ஆட்டம் மழையால் பாதிக்கப்படும்பட்சத்தில், நாளை ஆட்டம் நடக்கும்.

அதேநேரத்தில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால், அடுத்த நாள் முதலில் இருந்து ஆட்டம் தொடங்குமா அல்லது முந்தைய நாள் ஆட்டத்தின் எஞ்சிய பகுதி ஆட்டம் நடத்தப்படுமா என்பது தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.

ஆனால் வங்கதேச கிரிக்கெட் வட்டாரங்களோ, “போட்டியை ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதியில் நடத்தி முடிக்க முடிந்த அளவுக்கு முயற்சிப்போம். முடியாதபட்சத்தில் முந்தைய நாள் ஆட்டத்தின் எஞ்சிய பகுதி அடுத்த நாளில் நடத்தப்படும்” என தெரிவித்துள்ளன. இதேபோல் டக்வொர்த் லீவிஸ் விதிமுறை பின்பற்றப்படுமா என்பதும் தெரியவில்லை.

தரவரிசை வாய்ப்பு எப்படி?

ஒருநாள் போட்டி தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, இந்தத் தொடரை 3-0 என்ற கணக்கில் வெல்லும் பட்சத்தில் முதலிடத்தைப் பிடிக்க முடியாவிட்டாலும், அந்த இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவை நெருங்கும் வாய்ப்பைப் பெறும். அதேநேரத்தில் வங்கதேசம் 8-வது இடத்தில் இருந்து 9-வது இடத்துக்கு தள்ளப்படும்.

இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றால் தரவரிசையில் தொடர்ந்து 2-வது இடத்திலேயே இருப்பதோடு, அதன் ரேட்டிங் புள்ளிகளிலும் மாற்றம் இருக்காது. ஒருவேளை 1-2 என்ற கணக்கில் இந்தியா தோற்குமானால் இரு ரேட்டிங் புள்ளிகளை இழக்கும். எனினும் தரவரிசையில் மாற்றம் இருக்காது. ஒருவேளை வங்கதேச அணி இந்தத் தொடரை வெல்லும்பட்சத்தில் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளும்.

கேப்டன்ஷிப்பை அணுகுவதில் ஒவ்வொருவரிடமும் வித்தியாசம் இருக்கும்: தோனி

இந்திய கேப்டன் தோனி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் டெஸ்ட் கேப்டன் கோலியின் டெஸ்ட் உத்திகள் குறித்து கேட்டபோது, அவர் கூறியதாவது: இது நல்ல கேள்வி. கேப்டன்ஷிப் விஷயத்தில் ஒவ்வொருவருடைய அணுகுமுறையும் வித்தியாசமாகவே இருக்கும். வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியைப் பொறுத்தவரையில் எங்களுடைய பழைய உத்தியையே பின்பற்றுவோம்.

கேப்டன் பதவி என்று வரும்போது எளிமையாக செயல்பட முயற்சிப்போம். அதேநேரத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித்தியாசம் தேவை. அதை எல்லோரும் ஒரே மாதிரி அணுக வேண்டியதில்லை என்றார்.

உலகக் கோப்பை காலிறுதியில் இந்தியாவும், வங்கதேசமும் மோதின. அதில் ரோஹித் சர்மாவுக்கு நடுவர் அவுட் கொடுக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால் இந்தப் போட்டியில் இந்தியாவை பழிதீர்க்க வங்கதேசம் முயற்சிக்குமா என கேட்டபோது, அதை முற்றிலும் மறுத்த தோனி, “எந்த சர்ச்சை? நீங்கள் எந்தப் போட்டியைப் பற்றி பேசுகிறீர்கள்? உலகக் கோப்பை சர்ச்சை நடந்து நீண்ட நாட்களாகிவிட்டது. கடந்த ஓரிரு நாட்களில் நடந்த விஷயத்தை மட்டுமே நினைவில் வைத்துக் கொள்கிறேன்” என்றார்.

போட்டி நேரம்: பிற்பகல் 2.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.

இதுவரை..

1988 முதல் தற்போது வரை இவ்விரு அணிகளும் 29 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்தியா 25 வெற்றிகளைப் பெற்றுள்ளது. 3-ல் வங்கதேசம் வென்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x