

அமெரிக்க வில்வித்தைக் கூட்டமைப்பின் அழைப்பை ஏற்று உலக இளையோர் வில்வித்தைப் போட்டிக்கு செல்லவிருந்த இந்திய இளையோர் வில்வித்தை அணிக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டதையடுத்து வீரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
31 உறுப்பினர்கள் கொண்ட வலுவான அணியை இந்திய வில்வித்தை அமைப்பு தேர்வு செய்து விசாவுக்கு மனு செய்திருந்தனர். ஆனால் இதில் 20 பேருக்கு விசாவை மறுத்துள்ளது புதுடெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம்.
ஜூன்8-14-ல் நடக்கும் இந்த உலக இளையோர் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க அமெரிக்க வில்வித்தைக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்து அதனை ஏற்ற இந்திய அரசு, அணியை அனுப்ப அனுமதியையும் வழங்கிய நிலையில் தற்போது அமெரிக்க தூதரகத்தின் அதிர்ச்சி முடிவினால் இந்தியா பங்கேற்பது பிரச்சினையாகியுள்ளது.
7 வில்வித்தை வீரர்கள், 2 பயிற்சியாளர்கள், இந்திய விளையாட்டுத்துறை ஆணைய அதிகாரி ஆகியோருக்கு மட்டுமே விசா வழங்கப்பட்டுள்ளது. 20 பேருக்கு விசா மறுக்கப்பட்டது.
இந்திய வில்வித்தைக் கூட்டமைப்பின் பொருளாளர் விரேந்தர் சச்தேவா, பிடிஐ-யிடம் தெரிவித்த போது, விசாவுக்கான நேர்காணலில் இந்த 20 பேர் நிலவரம் குறித்து விசா அதிகாரி அதிருப்தி அடைந்திருக்கலாம் என்றும், அதாவது இவர்கள் வில்வித்தை போட்டி முடிந்து திரும்ப மாட்டார்கள், அங்கேயே தங்கி விட வாய்ப்பிருப்பதாக அதிகாரிக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
"இந்த முடிவு அதிர்ச்சியளிக்கிறது. பெரும்பாலான வில்வித்தை வீரர்கள், சமூகப் படிநிலையில் கீழிருந்து வருபவர்கள். அசாம், ஜார்கண்ட், பஞ்சாப், உ.பி. ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு ஆங்கிலம் சரிவர தெரியாது, இதனால் தொடர்புகொள்வதில் இவர்களுக்கு சிக்கல் இருக்கிறது. வாழ்வாதாரத்துக்கு என்ன செய்கிறீர்கள் என்று விசா அதிகாரி கேட்ட போது நாங்கல் வில்வித்தை மட்டுமே ஆடி வருகிறோம் என்று கூறினர், இதனால் விசா அதிகாரி இவர்களுக்கு விசா மறுத்திருக்கலாம்.
மேலும் அமெரிக்க வில்வித்தை அழைத்து, இந்திய அரசு அனுமதி அளித்த பிறகும் விசா மறுக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது” என்றார்.
இது குறித்து இந்திய வில்வித்தைக் கூட்டமைப்பு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தை அணுகியது, ஆனால் அதனாலும் பயன் ஏற்படவில்லை.