Last Updated : 25 Jun, 2015 04:20 PM

 

Published : 25 Jun 2015 04:20 PM
Last Updated : 25 Jun 2015 04:20 PM

ஒரு தொடரை இழந்ததால் இந்திய அணி மோசமாகி விடாது: ரெய்னா

வங்கதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி வெற்றியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற சுரேஷ் ரெய்னா, ஒரு தொடரை இழந்தவுடன் இந்திய அணி மோசமான அணி ஆகிவிடாது என்று கூறியுள்ளார்.

வங்கதேச தொடர் பற்றி அவர் கூறியதாவது:

"அணியின் வரைபடம் முன்னோக்கியே செல்கிறது, இந்த சீசனில் கடைசி போட்டிகள் இவை. அடுத்ததாக ஒருநாள் போட்டிகளில் எப்போது ஆடப்போகிறோம் என்பது தெரியவில்லை. இந்த வடிவத்தில் நன்றாக ஆடி வருகிறோம், நாம் 2-ம் இடத்தில் இருக்கிறோம் என்பதை மறந்து விட வேண்டாம். ஒரு தொடரை வைத்து ஒரு அணி மோசமாக போய் விட்டது என்றோ அல்லது பிரமாதமானது என்றோ நாம் கூறுவதற்கில்லை” என்றார்.

2014-15-இல் இந்திய அணி 20 ஒருநாள் போட்டிகளில் 14-ல் வென்றுள்ளது. ஆஸ்திரேலியா, நியூஸிலாந்துக்கு அடுத்தபடியாக இந்திய அணி உள்ளது.

ரெய்னா தொடர்ந்து கூறும்போது, “தோனி சாதித்ததை நாம் மதிப்புக் குறைவாக பேசக்கூடாது. அவர் பிசிசிஐ-க்காக நிறைய கோப்பைகளை பெற்றுத் தந்துள்ளார். அவர் ஒரு நல்ல மனிதர், நேர்மையாளர். ஒரு தொடர் அவரை மோசமாகச் சித்தரித்து விடாது. அவர் ஒரு நல்ல வழிகாட்டி, தலைவர், ஓய்வறையில் அவரை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம்.

இன்னும் அவரிடம் நிறைய கிரிக்கெட் திறன்கள் இருக்கின்றன, எனவே பொறுத்திருந்து பாருங்கள்.

கடந்த 2 போட்டிகளில் தோனி பேட் செய்த விதத்தைப் பார்க்கும் போது பேட்டிங் வரிசையில் 4-ம் நிலை என்பது அவருக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தெரியவருகிறது. அவர் கடந்த ஆண்டுகளாகவே நிறைய பொறுப்புகளை சுமந்து வருகிறார். இந்த தொடரிலும் தனது பொறுப்பை அவர் வெளிப்படுத்தினார்.

என்னுடைய மனநிலை கடந்த ஆண்டுகளாக திடமாகி வந்துள்ளது. பின்வரிசை வீர்ர்களுடன் எப்படி ஆடுவது என்பதை கற்றுக் கொண்டுள்ளேன்.

பின்னால் களமிறங்குவது பற்றி எந்த வித வருத்தமும் இல்லை. இந்தியாவுக்காக நிறைய வெற்றிகளைப் பெற்றுத் தரவேண்டும். நான் விரைவாக ஒரு 40 அலல்து 80 ரன்களைக் கூட எடுக்கலாம், ஆனால் 2011 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 35 நாட் அவுட், பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக அரையிறுதியில் 37 நாட் அவுட். இவைதான் என்னுடைய சிறந்த ஆட்டங்கள் என்று நான் கருதுகிறேன்.

முன்னால் களமிறங்க எனக்கும் பிடிக்கும், ஆனால் அணியின் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்வதுதான் நல்லது, அந்தப் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்" என்றார் சுரேஷ் ரெய்னா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x