

இந்திய அணி பங்கேற்கும் எந்த ஒரு போட்டியிலும் உடல் முழுதும் இந்திய மூவர்ணக் கொடியை அடையாளப்படுத்திக் கொண்டு மைதானத்திற்கு வந்து ஊக்கமளிக்கும் தீவிர ரசிகர் சுதிர் கவுதம் வங்கதேச ரசிகர்களால் டாக்காவில் தாக்கப்பட்டார்.
34 வயதான சுதிர் கவுதம், சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய அணியின் தீவிர ரசிகர். இவரை அறியாத ரசிகர்கள் ஏன் வீரர்களே கூட இருக்க முடியாது.
இந்தியா வங்கதேசத்துக்கு எதிராக தொடரை இழந்ததையடுத்து, சுதிர் கவுதம் இந்தி சேனல் ஒன்றில், தன்னை வங்கதேச ரசிகர்கள் டாக்காவில் கற்களை வீசித் தாக்கியதாகவும், தான் சென்ற ஆட்டோ ரிக்ஷா மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், வங்கதேச ரசிகர்கள் தன்னை துரத்தியதாகவும், பாதுகாப்பு அதிகாரிகள் தன்னை அவர்களிடமிருந்து காப்பாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர்கள் உலகக் கோப்பை தோல்விக்கு இந்திய அணியை மைதானத்தில் பழிவாங்கி விட்டதாகவும், இப்போது வெளியிலும் அதைச் செய்வதாக கோஷம் எழுப்பியதாக சுதிர் கவுதம் கூறியுள்ளார்.