

வங்கதேசத்துக்கு எதிராக 1-2 என்று ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணியின் கேப்டன் தோனி, ஆட்டம் முடிந்த பிறகு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய தோனி, 'நமக்குத் தேவை வேகப்பந்து வீச்சாளர்களா, அல்லது நல்ல பந்து வீச்சாளர்களா என்பதை முடிவெடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
நேற்றைய ஆறுதல் வெற்றி குறித்து தோனி, கூறும் போது, “ரன்கள் இருந்தால் வெற்றி நிச்சயம், இந்தப் போட்டியில் ரன்கள் குவித்தோம். நமது பவுலர்களுக்கு கூடுதலாக 10-15 ரன்களைக்கான சவுகரியம் அளிக்கும் போது ஆட்டம் சுவாரசியமாகிறது.
சில வேளைகளில் இத்தகைய, பந்துகள் மெதுவே வரும் ஆட்டக்களங்களில் இலக்கை விட பின் தங்கியிருக்கிறோம் என்பது போல் தெரியும், ஆனால் கடைசி 10 ஓவர்கள் நம் கைவசம் உள்ளது, அதில் சமமான ஸ்கோரையோ அல்லது அதற்கும் கூடுதலான சவாலான ஸ்கோரையோ எடுத்து விட முடியும்.
நான், 4-ம் நிலையில் அதிகம் பேட் செய்ததில்லை. அப்படியே செய்தாலும் அது 30-35 ஓவர்கள் சமயத்திலேயே இருக்கும். இதுதான் நான் பேட் செய்ய வேண்டிய தருணம், எனவேதான் ரெய்னாவை பின்னால் களமிறக்க முடிவெடுத்தோம்.
இதன் மூலம் 6-ம் நிலையில் ஒரு அனுபவ வீரர் ரெய்னா மூலம் நமக்கு இருக்கிறார். 6,7-ம் நிலையில் களமிறங்கும் வீரர்கள் நன்றாக விளையாடினால் நான் தொடர்ந்து 2-ம் நிலையில் களமிறங்க முடியும்.
முன்னதாக, ஸ்பின் பந்துவீச்சுக்கு எதிராக நான் சரியாக நகர்வு காட்டவில்லை, காரணம் எனக்குப் பிறகு பெரிய அளவில் பேட்டிங் இல்லாமல் இருந்தது.
இந்த வெற்றி நல்ல வெற்றி, ஆனால் ஒன்றைக் கூற விரும்புகிறேன், நமக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் தேவையா, நல்ல பந்து வீச்சாளர்கள் தேவையா என்பதை முதலில் முடிவெடுக்க வேண்டிய தேவை உள்ளது. வேகம் இல்லாவிட்டாலும், நல்ல பவுலர்களே தேவை.
நன்றாக வீச முடியாத, நன்றாக வீசாத, நிறைய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நிறைய வாய்ப்பளித்து விட்டோம்” என்று கூறினார் தோனி.