

வங்கதேசத்துக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டியில் 6-வது சதம் கண்ட தொடக்க வீரர் முரளி விஜய், தான் சிறப்பான முறையில் ஆடவில்லை என்று கூறியுள்ளார்.
“நேர்மையாகக் கூற வேண்டுமெனில், நான் எனது சிறப்பான ஆட்டத்தை ஆடவில்லை, விக்கெட்டை பறிகொடுக்காமல் இருப்பதே எனது முன்னுரிமையாக இருந்தது. வேகப்பந்து பவுலர்களைக் களைப்படையச் செய்து ஸ்பின்னர்கள் வரும் போது ரன் எடுக்கலாம் என்று திட்டமிட்டேன்.
மழை குறுக்கீடுகளுக்கிடையே பேட்டிங்கில் கவனம் செலுத்துவது கடினம். ஆனால் ஒரு தொழில்நேர்த்தி மிகுந்த பேட்ஸ்மென் அனைத்திற்கும் தயார் நிலையில் இருக்க வேண்டும். இரண்டாம் நாள் முழுதும் நானும், தவணும் ஆட திட்டமிட்டிருந்தோம், ஆனால் மழை காரணமாக அன்று ஆட்டம் நடைபெறவில்லை. நல்லநிலையில் இருக்கிறது இந்திய அணி, மீதமுள்ள 2 தினங்களில் சிறப்பாக ஏதாவது செய்வோம் என்று நம்பிக்கை உள்ளது.
பிட்ச் முதலில் பேட்டிங்குக்கு நன்றாக இருந்தது, ஆனால் பிறகு மந்தமானது. இதனால் அட்ஜஸ்ட் செய்வது சற்றே கடினமாக இருந்தது. ஷிகர் தவண் அருமையான தொடக்கம் கொடுத்தார், இதனால் அவருக்கு உறுதுணையாக் ஆட முடிவெடுத்தேன். நீண்ட நேரம் ஆட முன் முடிவுடன் களமிறங்கினேன்.
நான் இரட்டைச் சதம் எடுக்க திட்டமிடவில்லை, ஸ்கோரை 500 ரன்களுக்கும் மேல் கொண்டு செல்வதே நோக்கமாக இருந்தது. ஆனால் நான் அவுட் ஆன ஷாட் தேர்வு சரியல்ல, அந்த பந்துக்கு தவறான ஷாட் தேர்வு செய்தேன் அவுட் ஆனேன்.” இவ்வாறு கூறினார் முரளி விஜய்.
இதுவரை 5 முறை 80-90 ரன்களில் முரளி விஜய் ஆட்டமிழந்துள்ளார். ஆனால் இன்று 150 ரன்களை எட்டினார்.