

மழையால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளான இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
ஃபதுல்லா நகரில் நடைபெற்ற இந்த போட்டியின் 5 நாட்களும் மழையால் பாதிக்கப்பட்டன. 2-வது நாள் ஆட்டம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த கோலி தலைமையிலான இந்திய அணியில் ஷிகர் தவன் 173, முரளி விஜய் 150, அஜிங்க்ய ரஹானே 98 ரன்கள் சேர்த்தனர். இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 103.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 462 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
பின்னர், முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி, 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 30.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்திருந்தது.
சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழை காரணமாக கடைசி நாளான இன்ரு முதல் செசன் முற்றிலுமாக கைவிடப்பட்டது. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்து ஆடிய வங்கதேச அணியில் அதிகபட்சமாக இம்ருள் கெய்ஸ் 72 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்தவர்களில் அறிமுக வீரர் லிட்டன் தாஸ் 44 ரன்களும், சவும்ய சர்க்கார் 37 ரன்களும் எடுத்தனர். எஞ்சிய வீரர்கள் விரைவாக வெளியேறியதால் 65.5 ஓவர்களில் 256 ரன்களுக்கு சுருண்டது வங்கதேசம்.
இந்தியத் தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸில் 206 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, வங்கதேசத்துக்கு பாலோ ஆன் கொடுத்தது.
இதையடுத்து 2-வது இன்னிங்ஸை ஆடிய வங்கதேசம் ஆட்டநேர முடிவில் 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி டிராவில் முடிந்தது.
ஷிகர் தவன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
போட்டித் துளிகள்
* இந்தியாவும், வங்கதேசமும் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் 6-ல் இந்தியா வெற்றி கண்டுள்ளது. எஞ்சிய இரண்டு போட்டிகள் மழை காரணமாக டிராவாகியுள்ளன.
* ஃபதுல்லா டெஸ்ட் போட்டியில் 1,106 பந்துகள் மட்டுமே வீசப்பட்டுள்ளன. வங்கதேசத்தில் நடைபெற்ற டெஸ்டில் குறைவான பந்துகள் வீசப்பட்ட போட்டி இதுதான்.
* அஸ்வின் 87 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்தியாவுக்கு வெளியில் தனது சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்தார். இதற்கு முன்னர் வெளிநாடுகளில் நடைபெற்ற டெஸ்டில் அவர் 5 விக்கெட் வீழ்த்தியது கிடையாது.