இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்: இந்தியாவின் துருப்பு சீட்டு கோலி, புஜாரா

இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்: இந்தியாவின் துருப்பு சீட்டு கோலி, புஜாரா
Updated on
1 min read

இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணிக்கு விராட் கோலியும், சேதேஷ்வர் புஜாராவும் மிக முக்கியமான வீரர்களாகத் திகழ்வார்கள் என்று டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டனும், முன்னாள் இங்கிலாந்து பேட்ஸ்மேனுமான கெவின் பீட்டர்சன் தெரிவித்தார்.

இந்திய அணி வரும் ஜூன் மாதம் இங்கிலாந்து சென்று 5 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி, ஒரு டி20 போட்டியில் விளையாடவுள்ளது. இந்த நிலையில் பீட்டர்சன் கூறியிருப்பதாவது: உலகின் தலைசிறந்த பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ள அணிகளில் இந்தியாவும் ஒன்று. அப்படிப்பட்ட இந்திய அணி, சிறந்த கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.

ஆனால் இங்கிலாந்து அணி புதிதாக கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்திய அணியில் வியக்கத்தக்க வகையில் திறமையான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். புஜாரா, விராட் கோலி, முரளி விஜய் போன்றோர் இங்கிலாந்து மண்ணில் ரன் குவிக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள். இவர்கள் மூவரும் சிறப்பாக ஆடி ரன் குவிப்பது முக்கியம். இதற்கு முந்தைய தொடரில் ராகுல் திராவிடை தவிர வேறு யாரும் ரன் குவிக்கவில்லை. ஆனால் இந்த முறை திறமையான பேட்ஸ்மேன்கள் உள்ளனர்” என்றார்.

கடைசியாக 2011-ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அதில் 0-4 என்ற கணக்கில் தொடரை இழந்தது இந்திய அணி. அந்தத் தொடரில் இங்கிலாந்து அணிக்கு முக்கிய வீரராக இருந்த பீட்டர்சன், லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதமடித்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in