கவுஷல் 5வி/42; பிரசாத் 3வி/43- 138 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான்

கவுஷல் 5வி/42; பிரசாத் 3வி/43- 138 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான்
Updated on
2 min read

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 42.5 ஓவர்களில் 138 ரன்களுக்கு சுருண்டது.

இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்களில் ஒருவரான அஹமது ஷெஸாத் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் பிரசாத் பந்துவீச்சில் சங்ககாராவிடம் கேட்ச் ஆனார்.

இதையடுத்து முகமது ஹபீஸுடன் இணைந்தார் அசார் அலி. இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 46 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அசார் அலி 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, யூனிஸ்கான் களம்புகுந்தார். 100--வது போட்டியில் விளையாடும் யூனிஸ்கான் ரன் ஏதும் எடுக்காத நிலையில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழப்பதில் இருந்து தப்பினார். எனினும் அந்த வாய்ப்பை பயன்படுத்த தவறிய அவர் 6 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும், மறுமுனையில் நிதானம் காட்டிய முகமது ஹபீஸ் 42 ரன்கள் எடுத்த நிலையில் தரின்டு கவுஷல் பந்துவீச்சில் போல்டானார். இதன்பிறகு பாகிஸ்தானின் சரிவு தவிர்க்க முடியாததானது. ஆசாத் ஷபிக் 2, கேப்டன் மிஸ்பா உல் ஹக் 7, சர்ஃப்ராஸ் அஹமது 14, வஹாப் ரியாஸ் 4, ஜல்பிகர் பாபர் 5, யாசிர் ஷா 15 என வேகமாக நடையைக் கட்ட, 42.5 ஓவர்களில் 138 ரன்களுக்கு சுருண்டது பாகிஸ்தான்.

இலங்கை தரப்பில் தரின்டு கவுஷல் 10.5 ஓவர்களில் 42 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளையும், தமிகா பிரசாத் 13 ஓவர்களில் 43 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இலங்கை-70/1

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணியில் கருணா ரத்னே 28 ரன்களில் ஆட்டமிழக்க, ஜே.கே.சில்வாவுடன் இணைந்தார் குமார் சங்ககாரா. இந்த ஜோடி நிதானமாக ஆட, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 32 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்துள்ளது இலங்கை. ஜே.கே.சில்வா 21, சங்ககாரா 18 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

5-வது வீரர் யூனிஸ் கான்

இந்தப் போட்டி பாகிஸ்தானின் மூத்த வீரரான யூனிஸ் கானுக்கு 100--வது டெஸ்ட் போட்டியாகும். இதன்மூலம் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 5--வது பாகிஸ்தானியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். ஜாவித் மியான்தத் (124), இன்ஸமாம் உல் ஹக் (119), வாசிம் அக்ரம் (104), சலீம் மாலிக் (103) ஆகியோர் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடிய மற்ற பாகிஸ்தான் வீரர்கள் ஆவர்.

100--வது போட்டியில் விளையாடி வரும் யூனிஸ் கான், நேற்றைய ஆட்டத்தோடு சேர்த்து 8,835 ரன்கள் குவித்துள்ளார். 29 சதங்களை விளாசியுள்ள அவர், அதிக சதமடித்த பாகிஸ்தான் வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தான் தரப்பில் ஜுனைத் கான் ஒரு விக்கெட் எடுத்துள்ளார். மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தில் 74.5 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன.

2--வது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு இலங்கை இன்னும் 68 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in