

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் விளையாடி வரும் நடப்பு சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியில் கனடாவைச் சேர்ந்த முன்கள வீரர் இயான் ஹியூம் இடம்பெற்றுள்ளார்.
இந்த சீசனில் கொல்கத்தா அணியில் சேர்க்கப்பட்டுள்ள முதல் வெளிநாட்டு வீரர் இயான் ஹியூம்தான். முன்னாள் கனடா வீரரான இயான் ஹியூம், கடந்த ஐஎஸ்எல் சீசனில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிக்காக விளையாடி 5 கோல்களை அடித்தது குறிப்பிடத் தக்கது.
இயான் ஹியூம் சேர்க்கப் பட்டிருப்பது தொடர்பாக கொல்கத்தா அணியின் பயிற்சி யாளர் அந்தோனியோ லோபஸ் ஹபாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்ப தாவது: இந்த ஆண்டு இயான் ஹியூமுடன் இணைந்து பணியாற்றுவதற்கு மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறேன். கடந்த ஆண்டு அவர் மிகச் சிறப்பாக விளையாடினார். மிகுந்த அர்ப்பணிப்போடு விளை யாடக்கூடியவர். அவருடைய அந்த பண்பு, இந்த சீசனில் விளை யாட அவரைத் தயாராக வைத்தி ருக்கும் என குறிப்பிடப் பட்டுள்ளது.
கொல்கத்தா அணியின் உரிமையாளர்களில் ஒருவரான சஞ்ஜீவ் கோயங்கா, “கொல்கத்தா அணிக்கு இயான் ஹியூமை வரவேற்கிறேன். இந்த சீசனில் தலைசிறந்த வீரர்கள் அடங்கிய அணியை களமிறக்க காத்திருக்கிறோம். இந்த முறையும் சாம்பியன் பட்டம் வென்று கொல்கத்தா நகரையும், ரசிகர்களையும் பெருமைப்பட வைப்போம்” என தெரிவித்துள்ளார்.
2-வது சீசன் ஐஎஸ்எல் கால்பந்து போட்டி வரும் அக்டோபர் 3-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் ஆட்டம் சென்னையில் நடைபெறுகிறது. அதில் சென்னையின் எப்.சி. அணியும், அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும் மோதுகின்றன.