

இலங்கைகு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 157 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் படுதோல்வியடைந்தது.
செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட் செய்த இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 258 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 99 ரன்களுக்குப் பரிதாபமாகச் சுருண்டது. இதன் மூலம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1-1 என்று சமநிலையில் உள்ளது.
இங்கிலாந்தில் அந்த அணி அடைந்த படுதோல்வியாகும் இது. இதற்கு முன்பாக ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக 2001ஆம் ஆண்டு இங்கிலாந்து ஓல்ட் டிராபர்ட் மைதானத்தில் 86 ரன்களுக்குச் சுருண்டது.
டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் முதலில் இலங்கையை பேட் செய்ய அழைத்தார். திலகரத்னே தில்ஷன் 88 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து மண்ணில் தில்ஷன் எடுக்கும் முதல் அரைசதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அஷன் பிரியஞ்சன் என்ற வீரர் 33 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார்.
இங்கிலாந்து இலக்கைத் துரத்தியபோது நுவான் குலசேகராவின் அபாரப் பந்து வீச்சிற்கு இங்கிலாந்து 3 விக்கெட்டுகளை இழக்க ஜோ ரூட் டின் ஸ்டம்பை மலிங்கா பெயர்க்க 29/4 என்று சர்வு கண்டது.
கேப்டன் மோர்கன் களத்தில் இருந்தும் நடுக்கள இங்கிலாந்து வீரர்கள் சோபிக்கவில்லை. சேனநாயகே 7.1 ஓவர்களில் 13 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
மோர்கன் அதிகபட்சமாக 40 ரன்களை எடுத்தார். இங்கிலாந்தின் பந்து வீச்சும் ஸ்விங் ஆகும் சூழ்நிலைமைகளைச் சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை. பேட்ஸ்மென்களும் சரியாகக் கால்களை நகர்த்தாமல் மோசமாக ஆடி வரிசையாக பெவிலியன் திரும்பினர்.
இந்தத் தோல்வி ஒரு மோசமான தோல்வி என்றும் பேட்ஸ்மென்கள் மோசமாக விளையாடினர் என்றும் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் சாடியுள்ளார்.