Published : 04 Jun 2015 11:04 am

Updated : 04 Jun 2015 11:04 am

 

Published : 04 Jun 2015 11:04 AM
Last Updated : 04 Jun 2015 11:04 AM

பிளேட்டரின் சாம்ராஜியத்துக்கு ‘ரெட் கார்டு

பணபலம், செல்வாக்கு, உலகளாவிய பிரபலம் என எல்லாவற்றிலும் முதன்மையாகத் திகழும் உலகின் மிகப்பெரிய விளையாட்டு அமைப்பான சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிஃபாவை (FIFA) ஊழல் உலுக்கி எடுத்திருக்கிறது. ஒன்றல்ல, இரண்டல்ல… 17 ஆண்டுகள் பிஃபாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த 79 வயதான செப் பிளேட்டர் ஊலுக்கு கொடுத்த மிகப்பெரிய விலை தனது தலைவர் பதவி.

உலகப் புகழ்பெற்ற பிஃபாவை கால் நூற்றாண்டு காலமாக அரித்து வந்த ஊழல் கரையான்களை அழிக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது அமெரிக்க நீதித் துறை. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கால்பந்து போட்டிகளை நடத்தும் உரிமையை வழங்குவதற்காக சுமார் ரூ.980 கோடி அளவுக்கு லஞ்சம் பெற்றதாக பிஃபா நிர்வாகிகள் 14 பேர் மீது அமெரிக்க அட்டார்னி ஜெனரல் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஏ.வின் விசாரணையும் முடுக்கிவிடப்பட்டது.

7 பேர் கைது

புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான பிஃபா கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் நகருக்கு கடந்த வாரம் வந்திருந்த பிஃபா நிர்வாகிகள் 7 பேரை அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று ஜூரிச் போலீஸார் கைது செய்தனர். அதுதான் பிஃபாவின் ஊழல் பேர்வழிகளுக்கு விடுக்கப்பட்ட முதல் எச்சரிக்கை.

2018, 2022 உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் உரிமை ரஷ்யா மற்றும் கத்தார் நாடுகளுக்கு வழங்கப்பட்டதில் முறைகேடு நிகழ்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஸ்விட்சர்லாந்து போலீஸார், பிஃபா நிர்வாகிகள் கைது செய்யப் பட்ட அதேதினத்தில், பிஃபாவின் தலைமை அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். இது பிஃபாவுக்கு விடுக்கப்பட்ட இரண்டாவது எச்சரிக்கை.

பிஃபா நிர்வாகிகள் 7 பேரின் கைது, பிஃபா அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை போதாதென்று, ஐரோப்பிய கால்பந்து சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து பிஃபா தலைவர் செப் பிளேட்ட ருக்கு நெருக்கடிகள் வர ஆரம்பித்தன. அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். தேர்தலில் போட்டியிடக்கூடாது என எதிரப்புக் குரல்கள் கிளம்பின. அமெரிக்க நாடுகள் உலகக் கோப்பை போட்டி யிலிருந்து விலகுவோம் என எச்சரித்தன. பிஃபா தன் மீதான ஊழல் கறையை நீக்கினால்தான் ஸ்பான்சர் செய்வோம் என மிகப்பெரிய நிறுவனங்கள் மிரட்டின.

ஆனால் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த பிளேட்டரோ எதற்கும் அசரவில்லை. கடந்த வாரம் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு 5-வது முறையாக தலைவரானார். ஆனால் அடுத்த சில தினங்களில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது கால்பந்து உலகில் மிகப்பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

ராஜினாமா ஏன்?

பிளேட்டரின் ராஜினாமாவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. பிளேட்டர் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஏவின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். அதனாலேயே அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார் என கால்பந்து வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது. அமெரிக்க விசாரணை அமைப்புகளைச் சேர்ந்த மூத்த அதிகாரி களும் அதை உறுதி செய்துள் ளதாக நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த வாரம் ஜூரிச்சில் கைது செய்யப்பட்ட 7 பேரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளனர். அவர்கள் தங்களின் தவறுகளை ஒப்புக் கொண்டிருப்பதோடு, தங்களை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் பிளேட்டருக்கு எதிராக சாட்சியம் அளிக்க தயாராகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பிளேட்ட ருக்கு எதிராக வலுவான ஆதாரங் களை உருவாக்க முடியும் என எஃப்பிஏ அதிகாரிகள் நம்புகின்றனர். இது பிளேட்டருக்கு பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படு கிறது.

இந்த விவகாரத்தில் சட்ட நிபுணர் களிடம் பிளேட்டர் ஆலோசனை பெற்றதாகக் கூறப்படுகிறது. அவர்களும் தலைவர் பதவி யில் இருந்து விலகுவதே சரியாக இருக்கும் என பிளேட்டருக்கு ஆலோசனை வழங்கியிருக்கி றார்கள். ஒருவேளை தலைவர் பதவி யில் தொடர்ந்தால் இப்போது உங்களை காப்பாற்றிக் கொள்ள லாம். ஆனால் வரக்கூடிய நாட்களில் அது உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என சட்ட நிபுணர்கள் தெரிவித்தாகக் கூறப்படுகிறது.

சாம்ராஜியத்துக்கு முற்றுப்புள்ளி

தேர்தலுக்கு முன்பாக மிகப் பெரிய நெருக்குதல்கள் வந்த போதும், அதை சமாளித்து வெற்றி கண்டார் பிளேட்டர். ஆனால் கைது செய்யப்பட்ட அவருடைய சகாக்கள் அப்ரூவர்களாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளதால், வேறு வழியின்றி தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் இக்கட்டான நிலைக்கு பிளேட்டர் தள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. மொத்தத்தில் பிஃபாவில் நிகழ்ந்த கால் நூற்றாண்டு கால ஊழல், பிளேட்ட ரின் 17 ஆண்டுகால சாம்ராஜியத் துக்கு முடிவு கட்டியுள்ளது.

கால்பந்து விளையாட்டில் நடுவர் ரெட் கார்டு கொடுத்தால், சம்பந்தப்பட்ட வீரர் வெளியேற் றப்படுவார். அது, அவர் சார்ந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். ஆனால் இங்கே அமெரிக்க நீதித் துறை, பிஃபா நிர்வாகிகள் 7 பேரை கைது செய்தது, கால்பந்து சம்மேளனத்துக்கு காட்டப்பட்ட ரெட் கார்டாகவே பார்க்கப்படுகிறது. அந்த ரெட் கார்டு, பிஃபாவில் இருந்து பிளேட்டரை வெளியேற்றியுள்ளது.

தேர்தல் எப்போது?

பிளேட்டர் தற்போது ராஜினாமா செய்திருந்தாலும், புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் வரை அவர்தான் இடைக்கால தலைவராக இருப்பார். பிஃபாவின் அடுத்த கூட்டம் அடுத்த ஆண்டு மே மாதத்தில் நடைபெறவுள்ளது. ஆனால் அதுவரை புதிய தலைவரை தேர்வு செய்யாமல் இருந்தால் அது பிஃபாவின் செயல்பாடுகளை பாதிக்கும். அது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிளேட்டர், “புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான சிறப்பு பிஃபா கூட்டத்தை விரைவில் கூட்டுமாறு செயற்குழுவை வலியுறுத்துவேன்” என குறிப்பிட்டுள்ளார். பிஃபாவின் சிறப்பு கூட்டம் வரும் டிசம்பர் அல்லது 2016 மார்ச்சில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்முனைப் போட்டி?

பிஃபாவின் புதிய தலைவரா வதற்கு கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடந்த தேர்தலில் பிளேட்டரிடம் தோல்வியடைந்த ஜோர்டான் இளவரசர் அலி பின் அல் ஹுசைன் பிஃபா தலைவராவதில் தீவிரமாக இருக்கிறார். கால்பந்து விளையாட்டுக்கு சேவை செய்வதற்காக எப்போதும் தயாராக இருக்கிறேன் என அவர் அறைகூவல் விடுத்திருக்கிறார்.

ஐரோப்பிய கால்பந்து சம்மேள னத்தின் தலைவராக இருப்ப வரும், செப் பிளேட்டரின் எதிர்ப்பாள ருமான மைக்கேல் பிளாட்டினி போட்டியிடலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. பிரான்ஸைச் சேர்ந்த 59 வயதான பிளாட்டினி, பிளேட்டருக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்தாலும், சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. பிளேட்டரை எதிர்த்து வெற்றி பெறுவது கடினம் என்பதாலேயே அவர் போட்டியில் குதிக்கவில்லை. ஆனால் இந்த முறை போட்டியில் பிளேட்டர் இல்லாததால் அவர் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸைச் சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரரான டேவிட் ஜினோலா வும் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதனால் தற்போதைக்கு மும்முனைப் போட்டியில் இருக் கிறது பிஃபா தலைவர் பதவி.

இன்டர்போல் வளையத்தில் பிஃபா நிர்வாகிகள்

பிஃபா நிர்வாகிகள் ஜாக் வார்னர், நிகோலஸ் லியோஸ் உள்ளிட்ட 6 பேரின் பெயரை சர்வதேச அளவில் தேடப்படுபவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளனர் சர்வதேச போலீஸார் (இன்டர்போல்). அவர்களை கைது செய்வதற்கு சர்வதேச அளவில் முடுக்கிவிடப் பட்டுள்ளது.

ஜாக் வார்னர், நிகோலஸ் தவிர எஞ்சிய 4 பேரும் ஸ்போர்ட்ஸ் மார்க்கெட்டிங் நிறுவனங்களின் தலைவர்கள் ஆவர். ரூ.980 கோடி அளவுக்கு ஊழல் நடந்தது தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் மேற்கண்ட 6 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாக் வார்னர், பிஃபாவின் முன்னாள் துணைத் தலைவர் ஆவார். இவர் டிரினிடாட் அன்ட் டொபாக்கோவைச் சேர்ந்தவர். நிகோலஸ் லியோஸ் செயற்குழு உறுப்பினர் ஆவார். லியோஸ் தனது சொந்த நாடான பராகுவேயில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தலைவர் பதவிக்கு இந்தியர் போட்டி

பிஃபா தலைவர் பதவிக்கு அமெரிக்க கால்பந்து சங்கத்தின் தலைவராக இருக்கும் சுனில் குலாதி போட்டியிடலாம் என தெரிகிறது. 3-வது முறையாக அமெரிக்க கால்பந்து சங்க தலைவராக இருக்கும் குலாதி, உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் பிறந்தவர். கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்காவில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்த பெரும் பங்காற்றியுள்ளார் குலாதி.

ஐரோப்பிய கால்பந்துசங்க கூட்டம் ரத்து

செப் பிளேட்டர் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக ஐரோப்பிய கால்பந்து சங்க நிர்வாகிகளின் கூட்டத்தை கூட்டியிருந்தார் அதன் தலைவர் மைக்கேல் பிளாட்டினி. ஆனால் திடீரென பிளேட்டர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் செயல்பாடுகள் கணிக்க முடியாததாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் என்ன முன்னேற்றம் ஏற்படுகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம் என பிளாட்டினி தெரிவித்துள்ளார். பிளேட்டரின் ராஜினாமா குறித்து பேசிய பிளாட்டினி, “துணிச்சலான, கடினமான முடிவு. அதை வரவேற்கிறேன்” என்றார்.

ஸ்பான்சர்கள் வரவேற்பு

பிளேட்டரின் முடிவை வரவேற்றுள்ள பிஃபாவின் பிரதான ஸ்பான்சரான கோக-கோலா, “பிளேட்டரின் முடிவு சரியானது. அது கால்பந்துக்கும், ரசிகர்களுக்கும் நல்லது” என குறிப்பிட்டுள்ளது. இதேபோல் தென் கொரியாவைச் சேர்ந்த ஆட்டோ குழும நிறுவனமான ஹூண்டாய் கியா, விசா கார்டு குழுமம் ஆகியவையும் பிளேட்டரின் முடிவை வரவேற்றுள்ளன.

ரஷ்யா அதிர்ச்சி

பிளேட்டரின் ராஜினாமாவால் அதிர்ச்சி அடைந்துள்ள ரஷ்யா, “பிஃபாவுக்கு எதிரான நடவடிக்கைக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளே காரணம். கிரிமினல் குற்றச்சாட்டுகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும், அது ஒரு சதவீதம் மட்டுமே. 99 சதவீதம் அரசியல்தான் காரணம்” என சாடியுள்ளது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

பிஃபாபிளாட்டர் ராஜினாமாமைக்கேல் பிளாட்டினிலூயி பிகோஎஃப்.பி.ஐ.பிஃபா ஊழல்கால்பந்து

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author