

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஃபதுல்லாவில் இந்தியா வங்கதேச அணிகள் ஆடும் டெஸ்ட் போட்டி நேற்று துவங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 239 ரன்களை எடுத்திருந்தது. தவன் 150 ரன்களுடனும், முரளி விஜய் 89 ரன்களுடனும் இருந்தனர். நேற்றைய ஆட்டமும் மதிய நேரத்தில் மழையால் தடைபட்டது, 3 மணி நேர இடைவெளிக்குப் பிறகு 3 மணியளவில் தொடர்ந்து 90 ஓவர்களுக்கு மாறாக வெறும் 56 ஓவர்களே வீசப்பட்டன.
இந்நிலையில் இன்றைய ஆட்டமும் காலையிலிருந்து பெய்து வரும் கனமழையால் முதலில் தடைபட்டது. மதியம் 1 மணி நிலவரப்படி அங்கு மழை நின்று விட்டாலும் மைதானத்தில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியிருந்தது. தொடர்ந்து மைதானத்தை ஆய்வு செய்த நடுவர்கள் இரண்டாம் நாள் ஆட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்தனர்.
விராட் கோலி முழுநேர டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் டெஸ்ட் போட்டி தற்போது முழுதாக நடைபெறுமா என கேள்விக்குரியாகியுள்ளது.