

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் பல பெரிய கிரிக்கெட் வீரர்களை உருவாக்கியுள்ளது. அதில் பிரையன் லாரா அளவுக்கு உச்சம் பெற்றவர்கள் ஒருவரும் இல்லை என்றே கூறலாம். இந்த நிலையில் தட்டுத் தடுமாறி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இன்னொரு பிரையன் லாரா உருவானால் எப்படி இருக்கும்?
கர்ஸ்டன் காளிசரண் என்ற 14 வயது இளம் வீரர் டிரினிடாட்-டொபாகோ அண்டர் -15 அணியின் கேப்டன். இவர் மே மாதம் 11ஆம் தேதி போர்ட் ஆஃப் ஸ்பெயின் மைதானத்தில் 35 ஓவர்களில் 404 ரன்களை விளாசி புதிய சாதனை புரிந்துள்ளார்.
3ஆம் நிலையில், 10வது ஓவரில் களமிறங்கியுள்ளார் கர்ஸ்டன் காளிச்சரண். பள்ளிகளுக்கு இடையிலான இந்த கிரிக்கெட்டில் விஷ்ணு பாய்ஸ் இந்து கல்லூரிக்காக ஆடினார். வாலென்சியா ஹை ஸ்கூல் அணிக்கு எதிரான இந்த காலிறுதி ஆட்டத்தில் 44 பவுண்டரிகள் 31 சிக்சர்கள் விளாசிய இந்த இளம் புயல் 35 பந்துகளிலேயே சதத்தைப் பூர்த்தி செய்தார்.
இவர் ஏற்கனவே லாராவின் பள்ளிக் கிரிக்கெட் சாதனையையும் முறியடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் இடது கை பேட்ஸ்மென் ஆல்வின் காளிச்சரண் பெயரை இந்த இளம் வீரர் பெயர் கொண்டிருப்பதால் ஆல்வின் காளிச்சரண் மற்றும் பிரையன் லாரா ஆகிய இருவரது கலவையாகவும் இவர் திகழ்வார் என்ற பெருத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கர்ஸ்டன் காளிச்சரண் ஆட்டத்தைப் பார்த்து டிரினிடாட் & டொபாகோ விளையாடுத் துறை அமைச்சரே அசந்து போய் புகழ்ந்து பேசியுள்ளார்.
அதாவது இந்தச் சிறுவன் 404 ரன்களை எடுத்த விதம் தனக்கு பிரையன் லாரா 1980களில் ஆடியபோது ஏற்படுத்திய உணர்வை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.