

இந்திய அணியின் முழுநேர பயிற்சியாளராகும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்று கூறியுள்ளார் ராகுல் திராவிட்.
ரவிசாஸ்திரியின் மேற்பார்வையில் அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று இந்திய 19 வயதுக்குட்பட்டோர் மற்றும் ஏ அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் தெரிவித்தார்.
அதாவது, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகும் விருப்பம் இல்லை என்றார் திராவிட்.
"இல்லை. இந்திய அணியின் பயிற்சியாளராகும் எந்த வித ஆசையும் இல்லை. இந்தியா ஏ மற்றும் அண்டர் 19 அணி வீரர்களை அடுத்தக் கட்டத்துக்கு முன்னேற்றுவதே எனது பணி" என்றார்.
மும்பையில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொண்ட சர்வதேச விளையாட்டு மேலாண்மை நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராகுல் திராவிட் மேலும் கூறும்போது, “ரவிசாஸ்திரியும், பிற துணைப்பயிற்சியாளார்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நான் இந்திய பயிற்சியாளராக என்னை உயர்த்திக் கொள்ள விரும்பவில்லை.
ஒரு வீரராக இப்போது எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் பயிற்சிப் பொறுப்பு மிக முக்கியமானது. எனக்கு பெரிய வேலை கொடுக்கப்பட்டுள்ளதாகவே கருதுகிறேன். 2-3 தொடர்களுக்கு எனது சர்வதேச கிரிக்கேட் அனுபவங்களை இளம் வீரர்களிடம் பகிர்ந்து கொள்ள நல்ல வாய்ப்பு.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் வீரராகவும், பயிற்சியாளராகவும், சிறப்பு ஆலோசகராகவும் இருந்த அனுபவம் ஆட்டத்தையும் வீரர்களையும் மேலாண்மை பார்வையிலும் பயிற்சியாளர் பார்வையிலும் அறுதியிட உதவியது.
கொடுக்கப்பட்ட இந்தப் பணியில் மேலும் சிறப்புற முயற்சி செய்வேன்.