

ஒருநாள் போட்டிகளில் பேட்ஸ்மென்களின் ஆதிக்கம் அதிகமாகிறது என்ற விமர்சனங்களை அடுத்து ஒரு நாள் போட்டிகளின் விதிமுறைகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதன் படி முதல் 10 ஓவர்களில் கேட்சிங் பீல்டர்கள் நிறுத்தப்படவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பேட்டிங் பவர் பிளே என்பது நீக்கப்பட்டது. கடைசி 10 ஓவர்களில் 30 யார்டு வட்டத்துக்கு வெளியே இனி 5 பீல்டர்களை நிறுத்தி கொள்ளலாம். மேலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நோ-பாலுக்கான ஃப்ரீ ஹிட் பவுலர் கிரீசைத் தாண்டி வந்து வீசும் நோ-பால்களுக்கு மட்டுமல்லாமல், இடுப்புக்கு மேல் செல்லும் புல்டாஸ் பந்துகளுக்கான நோ-பால்கள் உட்பட பவுன்சர் நோ-பால்களுக்கும் ஃப்ரீ ஹிட் உண்டு.
ஜூலை 5-ம் தேதி முதல் இந்த புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. பவுலர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று தெரிகிறது. ஆனாலும் முதல் 10 ஓவர்களில் சர்க்கிளுக்கு வெளியே கேட்சர்கள் இல்லை என்பதால் பேட்ஸ்மென்களுக்கு வாய்ப்பு. அதே போல் கடைசி 10 ஓவர்களில் 30 யார்டு சர்க்கிளுக்கு வெளியே 4 பீல்டர்களுக்கு பதிலாக 5 பீல்டர்கள் வைத்துக் கொள்ளலாம் என்பதும் பேட்ஸ்மென்களிடையே இனி கடின உழைப்பைக் கோருவதாகும்.
இந்த மாற்றங்கள் இந்திய ஸ்பின் மேதை அனில் கும்ளே தலைமையிலான ஐசிசி கிரிக்கெட் கமிட்டியின் பரிந்துரைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பேட்ஸ்மென்களுக்கும் பந்துவீச்சாளர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கும் விதமாக விதிமுறைகள் மாற்றப்பட்டிருந்தாலும் ஆட்டத்தின் விறுவிறுப்பு பாதிக்காத அளவுக்கே இந்த மாற்றங்கள் இருக்கும் என்பதாக தலைமை செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் தெரிவித்தார்.